இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் 04.02.2020 அன்று நடைபெற உள்ள இலங்கையின் 72வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அரசு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கடந்த 1949ம் ஆண்டு இலங்கையின் முதல் சுதந்திர தின விழாவில் தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. அதன்பின் இந்த நடைமுறை மாற்றப்பட்ட நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நல்லிணக்கத்துக்கு வழி செய்யும் வகையில் மீண்டும் 2016 ஆம் ஆண்டு முதல் தமிழிலும் தேசியகீதம் பாடப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த முறையை மாற்ற மீண்டும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், “இலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே ஒலிக்கப்படும் என்பது துரதிருஷ்டவசமானது. இது இலங்கையில் இருந்து தமிழ்மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சி.
எனவே இலங்கை தேசிய கீதம் விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் உடனடியாக தலையிட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.