திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக பணியாற்றி வரும் திருச்சி சிவா எம்.பி., ஆ.ராசா எம்.பி., ஆகியோருடன் இணைந்து, கொள்கைப் பரப்பு செயலாளராக தங்க.தமிழ்ச்செல்வன் நியமிக்கப்படுவதாக தி.மு.க தலைமைக் கழகம் இன்று அறிவித்தது.
இதனையடுத்து, தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு, நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளராக சந்தித்த அவர், '' என்னை கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்ததற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கை பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா மற்றும் அ.ராசாவுடன் இணைந்து தி.மு.க வளர்ச்சிக்கு உண்மையோடு பாடுபடுவேன். தி.மு.க.வுக்கு தொடர்ந்து நன்றியோடு செயல்படுவேன்.
நான் எந்த பதவியும் எதிர்பார்த்து தி.மு.கவில் சேரவில்லை. மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுக்கும் போது விமர்சனங்கள் வரத்தான் செய்யும். மாற்றான் தோட்டது மல்லிகைக்கு மணம் உண்டு என்பதையும் உணர்ந்து இதனை தலைவர் செய்கிறார். ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்படக் கூடாது.
முதல்வர் லண்டன் சென்று பின் அமெரிக்கா செல்கிறார் என்றால் எதோ மர்மம் உள்ளது. முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த மர்மம் இரு தினங்களில் விலகும். முதல்வரின் உடை மாற்றம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. ஏன் வேட்டி சட்டையில் சென்றால் கையெழுத்து போடாமாட்டார்களா '' எனத் பேசினார்.