மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்தியா முழுவதும் பாஜக 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. எனினும், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் அக்கட்சிக்கு தோல்வியே கிடைத்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. 38 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ளது. புதுச்சேரியிலும் காங்கிரசே வெற்றி பெற்றுள்ளது.
தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வென்றுள்ளது. திமுக 23 தொகுதியில் வென்று மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரை பெற்றுள்ளது. 17-வது மக்களவையை பொறுத்தவரை பாஜக 303 இடங்கள் பெற்று முதலிடத்திலும், காங்கிரஸ் 52 இடங்கள் மட்டுமே பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது.
திரினாமுல் காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 22 இடங்களைப் பிடித்து நான்காம் இடத்தில் உள்ளது. சிவசேனா கட்சி ஐந்தாவது இடத்தில் உள்ளது.