கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்த TTF வாசன், இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு பிரபலமானவர் ஆவார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பைக்கிலே ஊர் ஊராக சுற்றி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வரும் இவர், பைக் ரேசர் என்பதால் தனது பைக்கில் அதிவேகமாக செல்வது போன்ற வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.
பப்ளிசிட்டிக்காக இவர் செய்யும் அட்ராசிட்டிகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. தொடர்ந்து இவர் பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தி வரும் கடந்த ஆண்டு சென்னையில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பைக் ரைடு செய்து கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் பகுதியில் அதிவேகமாக சென்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இவருக்கு கோர காயம் ஏற்பட்ட நிலையில், சட்டவிரோதமாக சாலையில் அபாயகரமாக வாகனம் ஓட்டியதாக போலீஸார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவரது லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர் கார் ஓட்டி அதனை வீடியோவாக பதிவேற்றி வந்தார். இதனிடையே போலீசுக்கு சவால் விடுக்கும் விதமாக இவர் வெளியிட்ட வீடியோவுக்கும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, TTF வாசனை ஹீரோவாக வைத்து, இயக்குநர் செல் அம் என்பவர் படம் எடுக்கவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.
‘மஞ்சள் வீரன்’ என்ற பெயர் கொண்ட அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குநர் செல் அம், யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார். அப்போது “TTF வாசன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்...” என்று அவர் பேசியது அதிகளவில் ட்ரோல்களுக்கு உள்ளாகியது.
இப்படியாக மஞ்சள் வீரன் திரைப்படம் குறித்த பேச்சுகள் சுற்றி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இதுகுறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது ‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து TTF வாசன் நீக்கப்படுவதாக, அப்படத்தின் இயக்குநர் செல் அம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் செந்தில் செல் அம் பேசியதாவது, “TTF வாசன் அவருடைய சொந்த வேலைகளில் பிஸியாக உள்ளதால் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. அவர் என்னுடனும் கதையுடனும் பயணம் செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது சரியாக வரவில்லை. அதனால் வேறு கதாநாயகனை மாற்றுகிறோம். புதிய கதாநாயகன் பற்றிய விவரமும், படத்தின் புதிய பர்ஸ்ட் லுக்கும் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும்.
சில கால சூழ்நிலை காரணமாக TTF வாசன் இந்த படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை. படத்தின் ஹீரோ சம்பந்தப்பட்ட காட்சிகளை தவிர மற்ற காட்சிகள் அனைத்து காட்சிகளும் ஏறத்தாழ 35% எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. புதிய ஹீரோ வந்தவுடன் அந்த காட்சிகளும் எடுத்து விரைவில் முழு படப்பிடிப்பும் முடிக்கப்படும்.
புதிய ஹீரோவிற்காக இரண்டு மூன்று பேரை தேர்வு செய்துள்ளோம். அதில் ஒருவரை இறுதி செய்துவிட்டு விரைவில் அறிவிப்போம். இப்போதும் சொல்கிறேன், TTF வாசன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், ஆனால் எனக்கும் அவருக்கு இந்த படத்தில் ஒத்துவரவில்லை.
ஜாதகம் பார்த்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் கூட சில நேரங்களில் பிரிகிறார்கள். அதே போல்தான் இந்த படத்தின் அறிவிப்பு வந்த பிறகும் ஹீரோ மாற்றப்படுவது. அவர் இந்த படத்திற்கு என்று நேரம் ஒதுக்கவில்லை. எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை, படம் தொடர்பாகவே அவர் நீக்கப்பட்டுள்ளார்.
TTF வாசன் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், சூழ்நிலை ஒத்துவரவில்லை. புதிய கதாநாயகன் வரும் அக்டோபர் 15ம் தேதி அறிவிக்கப்படுவார். மஞ்சள் வீரன் படத்தில் TTF வாசன் இல்லாவிட்டாலும் அவருடனான உறவு தொடரும்.” என்றார்.
ஒரு பக்கம் படத்தில் இருந்து TTF நீக்கப்பட்டுள்ளது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதுகுறித்து TTF வாசனுக்கு இயக்குநர் தெரிவிக்காமல், பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8-ல் TTF வாசன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு TTF வாசன் மஞ்சள் வீரன் படம் மட்டுமின்றி பிரபல நடிகர் கிஷோருடன் இணைந்து ஐ.பி.எல். என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.