அண்மையில் திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாக அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த லட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் சிலர் வேண்டுமென்றே அவதூறு பரப்ப முயன்று வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய் கொள்முதல் செய்த நிறுவனங்களில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம், பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க நெய் கொள்முதல் செய்வதாக பாஜகவை சேர்ந்த சிலர் அவதூறு பரப்பினர். ஆனால் இந்த போலியான தகவலை தமிழ்நாடு அரசு முற்றிலும் மறுத்துள்ளது.
மேலும் பழனி பஞ்சாமிர்த தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்தே கொள்முதல் செய்யப்படுவதாகவும், எனவே, பஞ்சாமிர்தம் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து இது குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், வர்த்தகப் பிரிவு நிர்வாகி செல்வகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேவஸ்தானம் சார்பில் பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சூழலில் பிரபல திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் செய்தி சமூக ஊடகத்தில் பேசுகையில், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலப்பதாக தெரிவித்தார். மோகன் ஜியின் இந்த அவதூறு பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்த நிலையில், சென்னை, இராயபுரத்தில் அவரது இல்லத்தில் வைத்து கடந்த செப்.24-ம் தேதி மோகன் ஜியை திருச்சி போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் ஜாமீன் கேட்டு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், இன்று நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, மனுதாரர் (மோகன் ஜி) வாய்ச்சொல் வீரராக இல்லாமல், எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன்பாக அதனை உறுதிபடுத்த வேண்டும் என்றும், உறுதிப்படுத்தாமல் எந்த ஒரு அறிக்கையையும் விடக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
மேலும் உண்மையிலேயே பழனி கோயில் மீது அக்கறை இருந்தால், அங்கு சென்று தூய்மைப் பணி மேற்கொள்ளலாம் அல்லது பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்திற்கு சென்றுகூட 10 நாட்கள் சேவை செய்யலாம் என்று கருத்து தெரிவித்தார்.
அதோடு இந்த அவதூறு பேச்சுக்கு சமூக வலைதள வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் வெளியாகும் பிரபல தமிழ் & ஆங்கில நாளிதழில் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்பதாக விளம்பரம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு, இயக்குநர் மோகன் ஜிக்கு நிபந்தனை ஜாமின் கொடுத்து உத்தரவிட்டுள்ளார்.