கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடிகர் திலீப் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையாள திரையுலகில் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் மூத்த நடிகை சாரதா, ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.ஆர். வல்சலகுமாரி உள்ளிட்ட பலரும் இருந்தனர். தொடர்ந்து திரை சினிமா துறையில் உள்ள பெண்களிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. இதையடுத்து இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் சுமார் 233 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்று, கடந்த 2019 டிசம்பரில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் ஆவணங்கள், ஆடியோ, வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களும் இருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் (ஆக 18) வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் மூலம் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும், மலையாளத் திரையுலகம் மாஃபியா பிடியில் சிக்கி உள்ளதும் தெரியவந்தது.
பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு பெண்களை வற்புறுத்துவதாகவும், ஒத்துழைப்பவர்கள், ஒத்துழைக்காதவர்கள் என்று முத்திரை குத்தி படவாய்ப்புகள் வழங்கப்படுவதாகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து அந்த பெண் வாய் திறந்தால், அவர் பிரச்னைக்குரியவராக கருதப்பட்டு, அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகலாம் என்பதால் அவர்கள் மவுனம் காக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அறிக்கை கேரள சினிமா துறையை தாண்டி இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல மாநிலங்களில் இதுபோல் குழு அமைத்து விசாரிக்க நடிகைகள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த சூழலில் பிரபல நடிகை ஒருவர், நடிகர் மீது வெளிப்படையாக பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் பிரபல நடிகையும் மாடல் அழகியான ரேவதி சம்பத், கடந்த 21 ஆண்டுகளுக்கு முன், தான் அறிமுக நடிகையாக திரைத்துறைக்கு வந்தபோது, நடிகர் சித்திக் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார். தனது 16 வயதில் ரேவதி சம்பத் கண்ட பாலியல் தொல்லை குறித்த சம்பவம் தற்போது அங்கே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லாலுக்கு அனுப்பி உள்ளார். பாவனா வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் சித்திக், குரழுப்பிய நிலையில், அப்போதே, இந்த சம்பவம் குறித்து ரேவதி சம்பத் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று கேரளா திரைப்பட அகாடமியின் தலைவரான இயக்குனர் ரஞ்சித் மீதும் வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள படத்தில் நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகவும், இதனால் அன்று இரவே வாய்ப்பை உதறிவிட்டு கொல்கத்தா திரும்பியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித்தும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், மாநில திரைப்பட அகாடமி தலைவர் பதவியிலிருந்து ரஞ்சித் ராஜினாமா செய்துள்ளார். ஹேமா குழு அறிக்கையின் எதிரொலியாக ஒவ்வொரு சம்பவமும் வெளிச்சத்துக்கு வருவது மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.