தமிழில் பிரபல நடிகராக இருப்பவர் விமல். கில்லி, குருவி, கிரீடம் உள்ளிட்ட சில படங்களில் சைடு ரோலில் நடித்த இவர், கடந்த 2009-ல் வெளியான 'பசங்க' படத்தின் மூலம் திரையுலகில் பெரிதாக தெரியவந்தார். தொடர்ந்து 2010-ல் வெளியான 'களவாணி' படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். அந்த படம் இவருக்கு பெரிய பெயர் பெற்றுக்கொடுக்க தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
தொடர்ந்து இவர் எத்தன், தூங்கா நகரம், தேசிங்கு ராஜா கலகலப்பு, மஞ்சப்பை, மாப்பிள்ளை சிங்கம் என அடுக்கடுக்கான படங்களில் நடித்து வந்த இவரது சில படங்கள் வெற்றி பெற்றாலும், பல படங்கள் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவரது நடிப்பில் கடந்த ஆண்டு 'விலங்கு' என்ற சீரிஸ் வெளியானது. கிரைம் த்ரில்லராக அமைந்திருக்கும் இந்த சீரிஸ் பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து விலங்கு 2 விரைவில் தொடங்கப்படும் என அண்மையில் விமல் பேட்டி அளித்திருந்தார்.
தொடர்ந்து இவரது நடிப்பில் அண்மையில் ‘குலசாமி’, ‘தெய்வ மச்சான்’ ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது கைவசம் 4- 5 படங்கள் வைத்திருக்கும் நிலையில், இவரது நடிப்பில் அடுத்து 'துடிக்கும் கரங்கள்' என்ற படம் வெளியாகவுள்ளது. வேலு தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக மிஷா நரங் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படகுகழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் விமல், தனது கசப்பான அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், "நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நல்ல படம்தானே என்று நம்பி நிறைய படங்களின் ஒப்பந்தத்துக்கு கையெழுத்து போட்டுவிடுவேன். ஆனால், அதற்கு பின்னாடி என்னை சேர்த்து வைத்து செய்வார்கள் என்று நினைக்கவில்லை. அதனால் நிறைய பட்டுவிட்டேன். இப்போதுதான் அது புரிந்தது.
என்னிடம் பலர் உங்கள் படங்கள் ஏன் வெளியாவதில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன். இனிமேல் என்னுடைய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இப்போதெல்லாம் நிறைய கையெழுத்துக்கள் போடுவதில்லை. விமலை வைத்து படம் பண்ணலாமா என்று யோசிக்கும் அளவிற்கு எனது கடந்த ஆண்டுகள் இருந்தது.
அந்த சமயத்தில்தான் 'துடிக்கும் கரங்கள்' பட வாய்ப்பு என்னை நம்பி வந்தது. எனக்கு கை கொடுத்த படம் இது. இதற்கு பிறகு தான் 'விலங்கு' சீரிஸில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது." நெகிழ்ந்து பேசினார். இந்த படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தரப்பு கூறியுள்ளது.