ஆண்டுதோறும் இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய திரை படைப்புகளுக்கு இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு இதனை தேர்ந்தெடுக்கிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் திரைப்படமானது தேசிய திரைப்பட விழாவில் பொதுமக்களுக்காக திரையிடப்பட்டு வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக அபர்ணாவுக்கும், சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷுக்கும், திரைக்கதை எழுதிய சுதா கொங்கராவுக்கும் அறிவிக்கப்பட்டது. மொத்தத்தில் 'சூரரை போற்று' திரைப்படத்திற்கு, "சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, இசை, படம்" என 5 தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.
இதனால் தமிழ் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர். அந்த வகையில் இந்த ஆண்டு 2021-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவுள்ளது. 69-வது தேசிய விருது பட்யலில் மிண்டும் சூர்யா இணைவார் என்று கூறப்படுகிறது. இவர் நடிப்பில் 2021-ம் ஆண்டு நேரடி ஓடிடி தளத்தில் வெளியான இந்த படமானது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இருளர் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கை, ராஜாக்கண்ணு என்பவருக்கு போலிஸாரால் நேர்ந்த உண்மையான கொடுமைகள் குறித்தும், அவரது மனைவிக்காக முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிக் கண்டது குறித்தும் பேசியிருக்கும் படம் ‘ஜெய் பீம்’.
டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படம் வெளியான பிறகு விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் அறிவிக்கப்படலாம் என்று ரசிகர்கள் மத்தியில் எதிரப்பார்ப்புகள் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி தமிழில் ஆர்யாவின் 'சார்பாட்டா பரம்பரை', 'கர்ணன்' உள்ளிட்ட படங்களும், தெலுங்கில் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற RRR திரைப்படமும், மலையாளத்தில் சூப்பர் ஹீரோ பேண்டஸி படமாக வந்த 'மின்னல் முரளி' திரைப்படமும், இந்தியில் ஆலியா பட்டின் 'கங்குபாய் காதியவாதி' படமும் சிறந்த கலை பிரிவில் ஏதேனும் ஒன்றில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.