மலையாளத்தில் பிரபல இயக்குநராக அறியப்பட்டவர் சித்திக். 1986ம் ஆண்டு பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன் ' என்கிற படத்திற்கு கதை எழுதி மலையாள சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 1989-ல் 'Ramji Rao Speaking’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
அதன்பின்னர் காட்ஃபாதர், வியட்நாம் காலனி, ஹிட்லர் உள்ளிட்ட படங்களை இயக்கி மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் இயக்குநராக உருவெடுத்தார்.
இதையடுத்து தமிழில் 2001-ம் ஆண்டு வெளியான ‘Friends’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் சித்திக். விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை எடுத்து விஜயகாந்தை வைத்து ‘எங்கள் அண்ணா’, பிரசன்னா நடிப்பில் ‘சாது மிரண்டா’, ‘காவலன், ஆகிய படங்களை இயக்கினார்.
இறுதியாக தமிழில் 2018-ல் அரவிந்த் சாமி, அமலாபால் நடிப்பில் வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இயக்கினார். பின்னர் மலையாளத்தில் 2020-ல் மோகன்லால் நடிப்பில் வெளியான 'பிக் பிரதர்' படத்தை இயக்கினார். இப்படம் மலையாள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்றை பெற்றது.
இதையடுத்து சினிமாவில் இருந்து சற்று ஓய்வில் இருக்கும் இவருக்கு அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இவருக்கு கல்லீரல் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. பின்னர் இதற்காக இவர் சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்தசூழலில் நேற்று இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த இயக்குநர் சித்திக் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 9.10 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இவரின் இந்த இறப்பு செய்தியை அடுத்து மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் இயக்குநர் சித்திக்கிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் சித்திக்கின் உடல் புதன்கிழமை காலை 9 மணி முதல் 11.30 மணி வரை கடவந்துரா ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கிலும், பின்னர் காக்கநாடு பள்ளிக்கரையில் உள்ள அவரது இல்லத்திலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இறுதிச்சடங்கு இன்று மாலை 6 மணிக்கு எர்ணாகுளம் மத்திய ஜும்ஆ மசூதியில் நடைபெறுகிறது.