தமிழில் பிரபல இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'அங்காடி தெரு'. இந்த படத்தில் மாற்றுத்திறனாளிக்கு மனைவியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை சிந்து (42). இந்த படத்திற்கு முன்னதாகவே கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வடிவேலுவுக்கு மனைவியாக நடித்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்து ஒரு சில படங்களில் சைடு ரோல் செய்து பிரபலமாக அறியப்பட்ட இவர், ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த சூழலில் இவருக்கு கடந்த 2020-ஆம் உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இவருக்கு மருத்துவத்துக்கு தேவையான உதவிகளை அவரது நண்பர்கள் வட்டாரமும் செய்து வந்தனர். தொடர்ந்து 3 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் உதவி செய்ய வேண்டும் என்று வீடியோ மூலம் கோரிக்கையும் விடுத்திருந்தார்.நாளடைவில் அந்த மார்பக புற்றுநோய், மற்றொரு மார்பகத்துக்கு பரவவே, இவரது நிலை மிகவும் மோசமாக மாறியது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இவரது உடல்நிலை மிகவும் மோசமாக மாறியதால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் நடிகை சிந்து காலமானார். இவரது மறைவு குறித்து செய்தியை பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இரங்கல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி, இரங்கல் தெரிவித்து வருவதோடு, இணையவாசிகள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு தற்போது தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.