மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் பாலா. சென்னையை சேர்ந்த இவர், 2002-ல் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் அன்பு, காதல் கிசு கிசு, கலிங்கா, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தொடர்ந்து அதன்பிறகு மலையாளத்தில் அதிக வாய்ப்பு கிடைக்கவே அங்கே படங்கள் தொடர்ந்து நடித்து வந்தார்.
மலையாளத்தில் பல படங்கள் நடித்து வந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு 2014-ல் பாலாவின் அண்ணனும், இயக்குநருமான சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தில் நடித்தார். அதில் அஜித்தின் 4 தம்பிகளில் ஒருவராக வருவார். அதன்பிறகும் மலையாளத்தில் நடித்து வந்த இவர், மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2021-ல் வெளியான 'அண்ணாத்த' படத்தில் நடித்தார்.
இந்த நிலையில், இவர் பிரபல மலையாள youtuber-ன் நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இவர்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கொச்சியை சேர்ந்த 'செகுதன்' (Chekuthan) என்ற Youtube சேனலை நடத்தி வருபவர் அஜு அலெக்ஸ் (Aju Alex). இவர் சினிமா தொடர்பான செய்திகள் உள்ளிட்டவையை தனது சேனலில் இவர் பதிவிடுவார்.
இந்த சூழலில் சம்பவத்தன்று நடிகர் பாலா தனது நண்பர்கள் 3 பேருடன் அஜூ அலெக்சின் நண்பரான முகமது அப்துல் காதர் என்பவர் வீட்டில் இருக்கும்போது அவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும், மிரட்டும் பாலா உடன் இல்லை என்றும், அவர் வீட்டின் வெளியே இருந்ததாகவும் போலீசில் பரபரப்பான புகார் அளித்துள்ளார்.
இவரது புகாரின் பேரில் கொச்சி திருக்காக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தான் அஜூ அலெக்ஸுக்கு எந்தவித மிரட்டலும் கொடுக்கவில்லை என்றும், இதற்கும் தனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்றும் நடிகர் பாலா விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் போலீசார் நடிகர் பாலாவை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
பிரபல நடிகர் பாலா, மலையாள பிரபல youtuber-க்கு துப்பாக்கியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் மோலிவுட்டில் (மலையாள திரையுலகில்) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.