தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளை செய்துகாட்டி பிரபலமானவர் காமெடி நடிகர் வெங்கடேசன். இவர் கருப்பசாமி குத்தகைதாரர் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவருக்கு திருமணமாகி மனைவியும் உள்ளார்.
இவர் மதுரை தபால்தந்திநகர் 3ஆவது தெரு பகுதியில் சொந்த வீட்டில் மனைவியுடன் வசித்துவரும் நிலையில், சமூகவலைதளத்தில் பாஜக குறித்தும், பிரதமர், அமித்ஷா, அண்ணாமலை குறித்தும் அவர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார். இதனிடையே இவருக்கும் இவரது மனைவி பானுமதிக்கும் இடையே அடிக்கடி குடும்பம் தொடர்பான வாக்குவாதம் இருந்துள்ளது.
இந்த பிரச்னை கடந்த சில நாட்களாக அதிகரித்தே காணப்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ எண்ணி, விவாகரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இதனால் பெரும் ஆத்திரத்தில் இருந்த மனைவி பானுமதி தனது கணவரை தாக்கி அவரது கால்களை உடைத்து வீட்டிற்குள்ளயே இருக்குமாறு முடக்க வேண்டும் என வெங்கடேசனின் ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.
மேலும், பானுமதி தனது உறவினரான பாஜக நிர்வாகியான கோசாகுளம் பகுதியை சேர்ந்த பாஜக பட்டியலணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்துவிடம் பிரச்னையை கூறியுள்ளார். இதனையடுத்து பானுமதிக்கு உதவுவதாக கூறிய பாஜக நிர்வாகியான வைரமுத்து, பாஜக நிர்வாகிகள் இருவரை சந்தித்து காமெடி நடிகர் வெங்கடேசன் பாஜக குறித்து விமர்சிப்பதால் அவரை அடிக்க வேண்டும் என்று தூண்டிவிட்டுள்ளார்.
எனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் நடிகர் வெங்கடேசன் தபால் தந்திநகர் அருகே காரில் வந்தபோது அவரது காரை வழி மறித்து ஓட்டுனரிடம் கத்தியை காட்டி மிரட்டிய பாஜக கும்பல், அவரை கடத்திசென்று பாஜக குறித்து கருத்துகளை பதிவிடுவயா என கூறியபடி கடுமையாக தாக்கி அவரின் கால்கள் இரண்டையும் உடைத்துள்ளனர்.
இதில் காயமடைந்த வெங்கடேசன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலிஸார் நடத்திய விசாரணையில் வெங்கிடேசனின் மனைவி, அவரின் கார் ஓட்டுநர் மோகன், ராஜ்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த 6 பேரை கைது செய்த போலிஸார் அவர்களை சிறையில் அடைந்தனர்.
மேலும் தலைமறைவாகி இருந்த சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி பாஜக விளையாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் தமிழ்சங்கு மற்றும், அவரது கூட்டாளி துளசிராமன் ஆகியோர் மதுரை போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்சங்கு பானுமதியிடம் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு கூலிப்படையை தயார் செய்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.