இந்தோனேசியாவின் பாலி என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் விக்கி (33). ஜிம் பயிற்சியாளராக இருக்கும் இவர், பிரபலமான நபர் ஆவார். இவர் தான் ஜிம்மில் மேற்கொள்ளும் பயிற்சிகளை வீடியோவாக தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டு பிரபலமானார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மேலும் இவர் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருவார்.
தொடர்ந்து ஜிம்மில் தினமும் பயிற்சி மேற்கொள்ளும் இவர், கடந்த 15-ம் தேதியும் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டார். அப்போது சுமார் 210 கிலோ எடை கொண்ட எடை தூக்கும் கருவியை தூக்க முயன்றார். அப்போது அந்த பழு தூக்கும் கம்பி அவரது கழுத்தில் விழுந்ததில், கழுத்து முறிந்து மயக்க நிலைக்கு சென்றார். இதையடுத்து அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கழுத்து முறிவு ஏற்பட்டதாகவும், அதனால் இதயம் மற்றும் நுரையீரல் பகுதிகளுக்கு செல்லும் முக்கிய நரம்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு ரசிகர்கள், ஜிம் பயிற்சியாளர்கள், பொதுமக்கள், நண்பர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில காலமாக ஜிம் பயிற்சியாளர்கள் பயிற்சி மேகொள்ளும்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வரும் செய்திகள் வெளிவந்த வண்ணமாக இருக்கும் நிலையில், தற்போது அதிக எடைகொண்ட எடை கருவியை தூக்கி கழுத்து முறிவு ஏற்பட்டு ஜிம் பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறப்பதற்கு முன்பாக ஜிம் பயிற்சியாளர் ஜெஸ்டின் விக்கி, 210 கிலோ எடை கொண்ட பழு தூக்கும் கருவியை தூக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜெஸ்டின் அந்த அதிக எடை கொண்ட கம்பியை தூக்குவதற்கு அங்கிருக்கும் சக பயிற்சியாளர் உதவி செய்கிறார். இருப்பினும் அவரால் தூக்க முடியாமல் அதனை அவரது கழுத்தில் விழுகிறது. இதில் அவரது கழுத்து முறிந்து சட்டென்று பின்னோக்கி சரிந்து கீழே விழுகிறார். இந்த வீடியோ வெளியாகி அனைவர் மத்தியிலும் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.