மலையாள மொழிகளில் காமெடி நடிகர்களில் ஒருவர்தான் உல்லாஸ் பந்தளம். ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமான இவர், பிறகு தனது வாழ்க்கையை திரையில் தொடங்கினார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
இவர், இவரது மனைவி ஆஷா(38) குழந்தைகள் உள்ளிட்டோர் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள பந்தளம் என்ற இடத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று உல்லாஸ், தனது மனைவி ஆஷாவை காணவில்லை என்று காவல்நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக உல்லாசின் வீட்டிற்கு சென்ற அவர்கள் தங்களது விசாரணையை தொடங்கினர். அப்போது வீட்டில் உள்ள அறைகளில் சோதனை செய்தபோது, மாடியில் உள்ள அறையில் ஆஷா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய அதிகாரிகள், அதனை உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது முதற்கட்ட விசாரணையில் சம்பவம் நடந்த முந்தைய நாள் உல்லாஸுக்கும், ஆஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
இதனால் ஆஷா தனது குழந்தைகளுடன் மாடியில் தூங்க சென்றுள்ள்ளார். மறுநாள் (இன்று) காலை உல்லாஸ் சென்று பார்க்கையில் மனைவியை காணவில்லை, எனவே அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது.
அதோடு இது தற்கொலை என்றும் போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஆஷாவின் தந்தை கூறுகையில், "எனது மகள் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளார். எனவே நான் இது குறித்து புகார் அளிக்க விரும்பவில்லை" என்றார்.
மலையாளத்தின் முன்னணி காமெடி நடிகர் உல்லாஸ், பந்தளத்தின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக தொலைக்காட்சியில் நடித்து வந்த உல்லாஸ், அப்போது பிரபலமானதையடுத்து, மம்முட்டி நடித்த ‘தெய்வத்தின் ஸ்வந்தம் கிளீடஸ்’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நுழைந்தார். அதன்பிறகு ‘மன்னார் மத்தை ஸ்பீக்கிங் 2’, ‘இது தாண்டா போலீஸ்’, ‘காமுகி’, ‘கும்பரீஸ், ‘ஹாஸ்யம்’, ‘கர்ணன் நெப்போலியன் பகத் சிங்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.