'Perfect Strangers' என ஓர் இத்தாலியப் படம். மிகவும் பிடித்தப் படம்!
நண்பர்கள் தங்களின் ஜோடிகளுடன் ஒரு டின்னருக்கு திட்டமிட்டிருக்கின்றனர். ஒரு ஜோடி தன் வீட்டில் டின்னரை host செய்கிறது. அந்த ஜோடியின் ஆணுடன் பெண் ஒரு பிரச்சினை குறித்து விவாதம் செய்கிறாள். விவாதம் முடிவதற்குள் ஜோடிகள் வரத் தொடங்குகின்றனர்.
இரவு உணவு தொடங்குகிறது.
எல்லா ஜோடிகளும் தங்களுக்குள் இருக்கும் அந்நியோன்னியத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். Host செய்யும் ஜோடியிலிருக்கும் பெண், அவர்களின் போலித்தனத்தில் வெறுப்படைந்து ஒரு விளையாட்டு விளையாட யோசனை சொல்கிறார்:
"ஒரு கேம் விளையடுவோம். எல்லாரும் அவரவர் போன்கள மேஜை மேல வைங்க. வர்ற phone calls எல்லாத்தையும் லவுட் ஸ்பீக்கர்ல போடுங்க. மெசேஜ்கள பக்கத்துல இருக்கறவங்க சத்தமா படிங்க!"
அவ்வளவுதான். படம் பற்றி எரியும்.
இனி 'Love Today' படம்.
இளையோர் காதலும் அதற்குள் தொழில்நுட்பம் நுழைந்து படுத்தும் பாடும்தான் படம்.
இன்றைய இளைய தலைமுறைக்கு பல ரகசியங்கள் இருக்கின்றன. இயல்பாக நடந்த ஒரு விஷயத்தின் காரணமாக உருவான ரகசியம் இல்லை. ரகசியம் வைத்துக் கொள்ள முடியும் என்கிற வாய்ப்பால் உருவாக்கப்படும் ரகசியங்கள்.
காதலுறவு இதுகாறும் கண்டு வந்த விழுமியங்கள் யாவும் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மாறுதல் அடைந்திருக்கின்றன.
கடிதம் இல்லை, வாட்சப்தான். நேரடி சந்திப்புக்கான காத்திருப்பு இல்லை, வீடியோ கால்கள் மற்றும் புகைப்படங்கள்! ஸ்பரிச அணைப்புகள் இல்லை, wet chats! ஊடலும் கூடலும் இல்லை, ப்ளாக்குகளும் அன்ப்ளாக்குகளும்தான்.
இதில் இருக்கும் சுவாரஸ்யம் என்னவென்றால் மேற்பத்தியில் குறிப்பிடப்பட்டவை செல்பேசி வழி நடப்பவை என்பதும் செல்பேசியில் காதலரின் எண் மட்டுமின்றி பிறரின் எண்களும் இருக்கும் என்பதும்தான்.
இந்தப் பேருண்மையைக் காதலுறவின் இரு முனைகளில் இருப்போருக்கு உணர்த்த ஒரு சந்தேகம் போதும். காதலுறவின் கோர முகம் தெரியத் தொடங்கும்.
காதலருடன் பிணக்கு நேர்ந்தால் உடனே ப்ளாக் செய்து அலைபாயும் மனதை ஆசுவாசப்படுத்த வாட்சப் உரையாடல் பட்டியலில் அடுத்த உரையாடல் காத்திருக்கலாம்.
இன்றைய ஹார்ட்டின்கள் மேகம் கொள்ளும் வடிவங்கள் போல. அர்த்தம் கொள்ளவும் முடியும், கொள்ளாமல் இருக்கவும் முடியும். இரண்டுக்கும் இடையே இருக்கும் வெளியில் காதல் விரவி பயணித்து பலவகை உறவுநிலைகளை அனுபவித்து ரசிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.
இதில் ஆண், பெண் பேதம் இல்லை. தொழில்நுட்ப நிறுவனங்கள் காண விரும்பும் லாபங்களில் பாவம் நம் பிள்ளைகளின் தலைகள் உருளுகின்றன.
ஆணோ பெண்ணோ பிற உறவுகளை நாடுகிறார்களா, பேசுகிறார்களா?
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
'லவ் டுடே' படம் மாங்கொட்டையை விதைத்துவிட்டு மரம் வளர்கிறதா என தோண்டிப் பார்க்காதே என சொல்கிறது.
Perfect Strangers படத்தின் இறுதிக்காட்சியில் தன் செல்பேசியை கொடுக்கும் ஆண், "பாஸ்வேர்டு கூட இல்லை. பார்த்துக் கொள். காதலுறவு மெல்லிய இழையால் ஆனது. அதை சோதிக்கத் தொடங்கினால் இல்லாமல் போய் விடும் ஆபத்து இருக்கிறது," என்கிறான்.
என்னைக் கேட்டால் ஒரு விஷயம் மட்டும்தான். விட்டுச் செல்பவரை கட்டி வைத்தாலும் இருக்க மாட்டார். உடனிருக்க முடிவெடுத்தவரை விரட்டி விட்டாலும் போக மாட்டார். எனவே இரண்டையுமே செய்யாமல் உருப்படியான வேலைகள் செய்யலாம்.
"நீங்கல்லாம் எவ்ளோ கேவலமானவங்க தெரியுமா" எனத் தொடங்காமல் இளையோரின் தொழில்நுட்ப வாழ்க்கை கொண்டிருக்கும் ஆணாதிக்கம் வழியாகவே சென்று பார்வையாளர்களை அடைந்து, பிறகு அவர்களுடன் படம் பேசத் தொடங்குகிறது. தொழில்நுட்ப யுகத்தில் உருவாகி இருக்கும் புது வகை சிக்கல்களைக் கடந்து காதலை எப்படி காப்பது என ஆலோசிக்கிறது.