மலையாள நடிகர் நிவின் பாலி, அஜூவர்க்கீஸ், சைஜு குருப், சிஜு வில்சன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் தான் 'சாட்டர்டே நைட்'. இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள ஹிலைட் மாலில் நடைபெற்றது. இதில் அந்த படத்தில் நடித்த பிரபல நடிகைகளான சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது சானியா ஐயப்பன் வரும்போது அவருடன் பாதுகாவலர்களும் அவரை பாதுகாத்து வந்தனர். அதையும் மீறி ரசிகர்கள் சிலர் அவரை காண முண்டியடித்துக்கொண்டு போட்டியிட்டனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்தவர் அந்த நடிகையிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதனால் கோபமடைந்த நடிகை சானியா, தவறாக நடக்க முயன்றவரின் கன்னத்தில் அறைந்தார். அப்போது கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட இரண்டு நடிகைகளையும் சக நடிகர்கள் காப்பாற்றி அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை சானியா, தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "நானும் எனது படக் குழுவினரும் கோழிக்கோட்டில் உள்ள ஒரு மாலில் எங்களது புதிய படமான 'சாட்டர்டே நைட்' படத்தை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கோழிக்கோடு மற்றும் அனைத்து இடங்களிலும் விளம்பரங்கள் சிறப்பாக நடந்தன. கோழிக்கோடு மக்களின் அன்புக்கு நன்றி. மாலில் நடந்த நிகழ்வில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த எங்கள் காவலர்கள் திணறினர். இதனையடுத்து நானும் என் சக நடிகரும் மாலில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தோம்.
அப்போது கூட்டத்திலிருந்தவர்களில் சிலர் எங்களிடம் தவறாக நடத்து கொண்டனர். இதை 'இது மிக மோசமான அனுபவம். எங்கே கை வைத்தார்கள் என்று சொல்லவே அசிங்கமாக இருக்கிறது. அங்குக் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களுக்குச் சரியாகப் பதிலளிக்க முடியவில்லை. யாரும் தங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற துன்பங்களை அனுபவிக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
அதே போல் சக நடிகை கிரேஸ் ஆண்டனியும் தனது எதிர்ப்பை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கோழிக்கோடு தான் விரும்பும் இடமாகும். ஆனால் படவிழாவில் கலந்துகொண்டு திரும்பியபோது கூட்டத்திலிருந்தவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதுபோன்று சங்கடமான சம்பவம் தங்களுக்கு எப்போதும் நடந்ததில்லை. என்னுடன் வந்த சக நடிகைக்கும் இதுபோல நடந்தது. அந்த நடிகை பதில்கொடுத்துவிட்டார். ஆனால் தான் ஒருகணம் திகைத்துப்போனதால் தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கேரளா மாநில மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறை விரைந்து குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும் என வற்புறுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகையின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்றும் மற்றொரு நடிகையின் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.