பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் ஜாமீனில் விடுதலையான இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீரா மீதுன் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சுதாகர், பிடி வாரண்ட் பிறப்பிக்கபட்ட மீரா மீதுனை பல இடங்களில் காவல்துறை தேடி வருவதாகவும், அவர் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்துவருவதாகவும் கூறினார்.
மேலும், மீரா மிதுன் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது அங்கிருந்து வேறு இடத்திற்கு அவர் சென்றுவிட்டார். செல்போன் எண்ணையும் அடிக்கடி மாற்றி வருவதாகவும் விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் வாரண்ட் நிலுவையில் இருப்பதாகவும் கைது செய்ய உரிய நடவடிக்கை காவல்துறை எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்து விரைந்து கைது செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தி வழக்கின் விசாரணையை அக்டோபர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.