’கார்கி’ படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. சாய் பல்லவி நடித்திருக்கிறார். சாய் பல்லவி தேர்ந்தெடுக்கும் படங்கள் தொடர்ந்து வித்தியாசமான முக்கியமானக் களங்களாக இருந்து வருவது கவனிக்கப்பட்டிருக்கும் சூழலில், கார்கி படமும் முக்கியமான களத்தைக் கையாண்டுள்ளது.
பாலியல் அச்சுறுத்தல் மற்றும் வன்முறை!
சாய் பல்லவியின் பெயர் கார்கி. பள்ளிக் கூட ஆசிரியையாக இருக்கிறார். அப்பா ஒரு குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். அம்மா வீட்டிலேயே இட்லி மாவு அரைத்து விற்கிறார். ஒரு தங்கை, பள்ளியில் படிக்கிறார். பள்ளிக்கூடத்தில் ஒரு செய்தியைப் பார்க்கிறார் கார்கி. அவர் வசிக்கும் பகுதியில் ஒரு சிறுமி வன்புணரப்பட்ட செய்தி. சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நால்வர் வட மாநிலத்தவர்.
வீடு திரும்புகிறார். அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை. செல்பேசியில் அழைத்துப் பார்க்கிறார். அழைப்பு ஏற்கப்படவில்லை. எனவே அப்பா செக்யூரிட்டி வேலை பார்க்கும் குடியிருப்புக்கு நேராக செல்கிறார். அங்குதான் சிறுமி வன்புணரப்பட்டச் சம்பவம் நடந்திருக்கிறது. ஆகவே குடியிருப்பில் பணிபுரிபவர்கள் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். அப்பாவும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். எனவே கார்கி காவல்நிலையத்துக்குச் செல்கிறார். அங்கிருக்கும் காவலர் அவரின் அப்பா பெயர் என்னவென கேட்க, ‘பிரம்மானந்தா’ என்கிறார் கார்கி. அதிரும் காவலர் அவரை காவல் அதிகாரியைச் சென்று சந்திக்கச் சொல்கிறார்.
காவல் அதிகாரி, கார்கியின் அப்பாதான் குற்றவாளி என்கிறார். அவ்வளவுதான். ஏதோ தவறு நடந்திருப்பதாக சொல்கிறார் கார்கி. ஆனால் காவலர்கள், மக்கள் கோபமடையக் கூடும் என்பதால் கார்கியை அம்மாவையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு வேறு ஊருக்கு இடம்பெயரச் சொல்கின்றனர். ஆனால் கார்கி மறுக்கிறார். அப்பாவின் மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்கச் சட்டப் போராட்டத்துக்குத் தயாராகிறார்.
வழக்கறிஞர் சங்கம் கார்கியின் அப்பாவுக்கு வாதாட மறுக்கிறது. வழக்கறிஞர் ஜூனியராக பணிபுரியும் காளி வெங்கட் வழக்காட முன் வருகிறார். திக்கு வாய், பயிற்சியின்மை போன்றவற்றை மீறி அவர் வாதாடுவதும் வழக்கில் இருக்கும் ஓட்டைகளை சுட்டிக் காட்டுவதும் திரையரங்கில் கைதட்டல்கள் பெறுகிறது. வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் நகைச்சுவை முத்திரையும் பதித்திருக்கிறார் காளி வெங்கட். உதாரணமாக, ஷெர்லாக் மல்லையா.
பொதுப்புத்தி வழங்கும் தீர்ப்புக்கு எதிராக ஒற்றை ஆளாக கார்கி போராடுகிறார். வெற்றி அடைந்தாரா இல்லையா என்பது மிச்சக் கதை. கார்கி பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் கார்கி. கண்டிப்பான ஆசிரியையாக, பாசமிகு மகளாக, கையறுநிலையில் தவிப்பவராக என எல்லா வகை உணர்வுகளையும் மிக அநாயசமாக கடத்தியிருக்கிறார் சாய் பல்லவி.
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறையைப் படம் பேசினாலும் சில முக்கியமான இடங்களில் ‘லிபரலிசம்’ எட்டிப் பார்ப்பது மட்டும் உறுத்துகிறது. உதாரணமாக ’இலவச சட்ட உதவி’ வழங்கும் மையத்தில் அமர்ந்திருப்பவர் மிக்சர் சாப்பிடுவதாகக் காட்டுவதும், பொது மனசாட்சிக்கான வக்காலத்தைச் சுற்றி வளைத்து உள்ளீடாக உணர்த்துவதும் காவல் அதிகாரியை பேருன்னதராகக் காட்டுவதையும் சொல்லலாம். அவற்றைத் தவிர்த்து பார்த்தால், கார்கி அவசியமான படம். அது முன் வைக்கும் கருத்து, முக்கியமானக் கருத்து.நல்லப் படம் என்பதால் சீக்கிரமே திரையரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டு விடும். எனவே பார்த்து விடுங்கள்