தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி ஐயர். இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2011 இல் வெளியான 'அவன் இவன்' திரைப்படம் மூலம் ரசிகர்கள் முன் தோன்றினார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, 'தெகிடி', 'அதே கண்கள்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றார்.
இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
இந்த நிலையில், தற்போது அறிமுக இயக்குநர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில், 'வேழம்' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக அசோக் செல்வனும், கதாநாயகிகளாக ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் ஜூன் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜனனி ஐயர், படம் குறித்து பல தகவலைகளையு, அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு பேசும்பொழுது, "தயவு செய்து இனி என்னை யாரும் ஜனனி ஐயர் என குறிப்பிடாதீர்கள், ஜனனி என்று மட்டுமே கூறுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் ஜனனிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக காணப்படுகிறது.
இவர் குறுகிய படங்களில் நடித்திருந்தாலும் ஒரு நடிகையாக மட்டும் அல்லாமல், சமூக ஆர்வலராகவும் இருந்து வரும் இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை ஜனனி தனது பெயரின் பின்னால் இருக்கும் 'ஐயர்' என்ற பெயரை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.