உலக சினிமாக்கள் ஒரு முக்கியமான அனுபவத்தை படம் பார்ப்பவர்களுக்கு வழங்குகின்றன. நம் நாடு, மொழி, வட்டாரம், இனம் ஆகியவற்றைத் தாண்டிய ஒரு பரந்துபட்ட பார்வையில் உணர்வுகளை ஒன்றிணைக்கும் அற்புதமான வேலையை உலக சினிமாக்கள் செய்கின்றன. நம் பார்வையை அகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் விரிவாக்க அவை உதவுகின்றன.
அத்தகைய ஓர் உலகப் படம்தான் Capernaum!
Capernaum படம் லெபனான் நாட்டின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பற்றிய படம். நாயகன் செயின் எல் ஹஜ் என்ற ஒரு 12 வயது கதாபாத்திரம்தான். ஒருவரைக் குத்திய குற்றத்துக்காக ஐந்து வருட சிறைத் தண்டனையில் இருப்பவன் செய்ன். நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது அவன் முக்கியமான கோரிக்கை வைக்கிறான். ‘தன் அனுமதியின்றி தன்னைப் பெற்றதற்காக பெற்றோர் கைது செய்யப்பட வேண்டும்’ என்பதே அக்கோரிக்கை.
இந்த உலகை நாம் படுத்திய நாசத்துக்கு இன்னொரு உயிரை பெற்றெடுத்து ஏன் அவதிப்பட வைக்க வேண்டுமென்பதே படத்தின் சாரம். பெரியார் தொட்டு பலர் சொல்லிய செய்திதான். ஆனாலும் படத்தின் வழியாக காட்டப்படும் ஏழைகளின் வாழ்வும் அவர்கள் மீது நடத்தப்படும் சுரண்டலும் லெபனானாக இருந்தாலும் நமக்கு இணக்கமான சூழலாகவே தெரிகிறது. அதே வகை சுரண்டல் இங்கேயும் நிகழ்கிறது.
எல்லைகள் ஒரு பொருட்டே இல்லை. உலகம் முழுக்க இருக்கும் ஏழ்மைக்கும் சுரண்டலுக்கும் பின் ஒற்றைக் கை மறைந்திருப்பதுதான் மேலும் மேலும் புலனாகிறது. அதற்கெதிராகப் போராடும் சித்தாந்தத்தை நோக்கி நாம் நகர்வதும் இயல்பாகவே நேர்கிறது.
'தமிழ் சினிமா பார்ப்பவனெல்லாம் தொக்கா' என அறச்சீற்றம் கொள்ளலாம். ஆனால் உள்ளூர் சினிமாக்களை பார்ப்பவர்கள் பெரும்பாலும் சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித்திலேயே முடிந்து விடுகிறார்கள். அனைவரும் பழம்பெருமை பேசி, 'நாங்கல்லாம் யார் தெரியுமா?' என ஷோல்டர் தூக்கும் மக்களாகத் தேங்கி விடுகிறோம். குறைந்தபட்சம் 'உதிரிப்பூக்கள்', 'ஆக்ரோஷ்' கூட பார்த்திருக்க மாட்டோம். 'உலக சினிமா தரத்தில் தமிழ் சினிமாவும் இருக்கிறது' எனச் சொல்லி ஹாலிவுட்தான் உலக சினிமா என நம்புகிறோம்.
’கேப்பர்நாம்’ படம் காட்டும் புலம்பெயர் தொழிலாளர் வாழ்க்கையை நாம் மிகச் சமீபத்தில் கொரோனா முதல் அலையில்தான் தெரிந்துகொண்டோம். அந்த புலம்பெயர் தொழிலாளர்கள் எல்லாம் நமக்கு மிகவும் அருகிலேயேதான் இருந்தனர். ஆனால் அவர்களின் வாழ்க்கையை நாம் கவனிக்கக் கூட இல்லை. ‘கேப்பர்நாம்’ படத்தில் வரும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோரின் வாழ்க்கைகளுக்கும் கூட மிக நெருக்கத்தில்தான் நாம் இருக்கிறாம். நம் புறமண்டைக்கு பின்னாலும் ‘நான்’ என்ற சிந்தனைக்கும் பக்கவாட்டில் நிற்கும் மனிதர்களின் வாழ்க்கைகளை நாம் அறிந்துகொள்ள விரும்பாததிலிருந்துதான் உலகின் பெரும் கொடுமைகளும் அநீதிகளும் நிகழ்த்தப்படுகின்றன. நாமுமே அவர்களைப் போன்ற அநாதரவு நிலையில் உதிரிகளாக மட்டுமே இருக்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ளும் நிலையிலும் நாம் இல்லை.
இந்திய சினிமாக்களும் சித்தாந்தங்களும் உலக மூலதனத்தை எதிர்கொள்ள முடியாத போதாமையில் இருக்கின்றன. உலகச்சூழலுக்கு ஏற்றார்போல் தகவமைத்துக் கொள்ளாத சித்தாந்தங்களும் சினிமாக்களும் வெற்றுப்புகழ் பாடி மக்களையும் ரசிகர்களையும் வஞ்சித்து பாழுங்கிணற்றில் தள்ளுவதாகத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இனவிருத்தி செய்வதற்கான தார்மீகம் நமக்கு இருக்கிறதா என்ற கேள்வியை கேப்பர்நாம் படம் எழுப்புகிறது. அபத்தமாகத் தெரிந்தாலும் மானுடம் வந்து சேர்ந்திருக்கும் இடம் இக்கேள்விதான்.
இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இருக்கிறது.