உலகின் ஆகச்சிறந்தப் படங்களில் ஒன்றான The Godfather சென்னையில் கடந்த ஒரு வாரமாக திரும்ப திரையிடப்பட்டு வருகிறது. அண்ணா நகரின் VR தியேட்டர் மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவின் எஸ்கேப் சினிமா ஆகியவற்றில் படம் ஒரு காட்சியாக ஓடுகிறது.
காட்ஃபாதர் படத்தைப் பார்த்து ரசித்த எவருக்கும் திரையில் அதை ரசிக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். படத்தின் மறுதிரையிடலும் பெரிய அளவில் வெளியே தெரியப்படாமலேயே எல்லா நாளின் காட்சிகளும் 70 சதவிகிதமேனும் நிரம்பி விடுகிறது. காட்ஃபாதர் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு படம் பார்ப்பவர்களுக்கு அப்படம் கொண்டாடப்படுவதன் காரணம் புரியாமல் போகலாம். இன்றைய ‘விறுவிறு’ சினிமா ரசிகர்களுக்கு அப்படம் ‘போர’டிக்கும் படமாகவும் தெரியலாம்.
மறுதிரையிடலை பார்த்து ‘இதெல்லாம் என்ன படம்’, ‘இதைப் போய் ஏன் கொண்டாடுகிறார்கள்’ என்பது போன்ற பதிவுகள் தொடங்கி, ‘மாஃபியா உலகம் பற்றி அரைகுறையாகவே காண்பிக்கப்பட்டிருக்கிறது’, ‘திருத்தமான ஷாட்டுகளே படத்தில் இல்லை’, ‘கதாபாத்திரங்கள் மேம்போக்காக இருக்கிறது’ ’எதிரிகள் ஒழிக்கப்பட எடுக்கப்படும் முயற்சிகளில் புத்திசாலித்தனம் இல்லை’ எனப் பட்டியலிடப்பட்ட விமர்சனம் வரை உலவுகின்றன.
உண்மைதானே.. ஏன் இப்படம் கொண்டாடப்பட வேண்டும்?
முதலில் காட்ஃபாதர் படம் பற்றி சில துணுக்குகள்:
- இப்படம் 1969ஆம் ஆண்டில் மரியோ புசோ எழுதி வெளியான Godfather நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
- படம் இத்தாலியிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறி மாஃபியா சாம்ராஜ்யம் அமைத்த ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை.
- படத்தின் இயக்குநரான பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலோவே இத்தாலிய குடியேறிகளின் பேரன்தான்.
- படத்தைத் தயாரித்த பாரமவுண்ட் நிறுவனம் முதலில் பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலோவை அணுகவில்லை. இத்தனைக்கும் அவர் திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது கூட பெற்றிருந்தார்.
- இரண்டு இயக்குநர்கள் மறுத்த பிறகுதான் இயக்குநர் வாய்ப்பு கப்போலோவுக்கு வந்தது. ஆனால் அவருக்கும் விருப்பம் இருக்கவில்லை. அவரே இத்தாலியக் குடியேறிகளின் வம்சாவளி என்பதாலும் குற்றத்தை கொண்டாடும் வண்ணம் படம் எடுக்கவும் தயங்கினார்.
- பிறகு அவர் ஒப்புக்கொண்டார். காட்ஃபாதர் நாவலை முதலாளித்துவம் மற்றும் அமெரிக்க வாழ்க்கையை விமர்சிப்பதற்கான களமாக பயன்படுத்த முடியும் என்பதால் வாய்ப்பை அவர் ஒப்புக் கொண்டதாக சில வருடங்கள் கழித்துக் கூறியிருக்கிறார்.
- கப்போலோ வாய்ப்பை ஏற்ற பிறகும் பிரச்சினை தீரவில்லை. காட்ஃபாதர் பாத்திரத்துக்கு அவருடைய தேர்வு மார்லன் பிராண்டோ. ஆனால் மார்லன் பிராண்டோ சிக்கலானவர் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை. நிறையப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒரே ஒரு முறை மார்லன் பிராண்டோவை சந்திக்க தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். அந்த நாளன்று தலையை ஏற்றிச் சீவி, வாய்க்குள் பக்கவாட்டில் பஞ்சு வைத்து, மெதுவான நடையுடன் வந்து பாத்திரமாகவே மாறி கிசுகிசுப்பாக பேசியிருக்கிறார் மார்லன் பிராண்டோ. அவரை நிராகரிக்க தயாரிப்பாளர்களால் முடியவில்லை.
- அல் பசினோவுக்கு காட்ஃபாதர்தான் முதல் படம். மார்லன் பிராண்டோவுக்கு மகனாக பிரதான பாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும். வழக்கம்போல் தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. தெரிந்த முகங்களைப் போட விரும்பினர். எனினும் கப்போலோ விடவில்லை. அந்தச் சமயத்திலெல்லாம் அவர் மீது தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் அதிருப்தி இருந்தது. ஒருவழியாக 1971ஆம் ஆண்டில் படப்பதிவு நடந்தது.
- மார்ச் 15, 1972 அன்று படம் வெளியானது. நேராக படம் உச்சத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதுவரையிலான அமெரிக்கத் திரைமொழி அனைத்தையும் காட்ஃபாதர் உடைத்திருந்தது. நீளமான சீக்வென்ஸ்கள், மாண்டேஜ்கள் என நாவலின் சாரத்தை காண்பித்து அடிநாதமாக ஒரு படத்துக்கான திரைக்கதை அற்புதமாக நெய்யப்பட்டிருந்தது. நடிகர்களின் நடிப்பு, கலை இயக்கம், ஒளிப்பதிவு, இயக்கம் என எல்லா திரைப்படத்தின் எல்லா பங்களிப்பும் அதன் உச்சத்தைத் தொட்டிருந்தது.
- ‘வெகுஜன படைப்பின் எல்லைக்குள்ளிருந்து பிரான்சிஸ் ஃபோர்டு கப்போலோ அமெரிக்க வாழ்வை நேர்மையாக பதிவு செய்யும் ஓர் அற்புதமான படைப்பை படைத்திருக்கிறார்’ என டைம் பத்திரிகை பாராட்டியது. ‘வேறெந்த அமெரிக்கப் படமும் இந்தளவுக்கு அமெரிக்காவின் இனக்கலாச்சாரத்தை பதிவு செய்ததில்லை’ என அது குறிப்பிட்டது.
எல்லாமும் சரி. ஆனாலும் படத்தில் என்ன அற்புதம் இருக்கிறது?
இருக்கிறது.
திரைக்கதை என்றால் மிகவும் எளிமையான கதைதான். ‘போதை மருந்து விற்க மறுக்கும் ஒரு டான் கொலைமுயற்சிக்கு ஆளாகி, ஒரு மகனையும் பறிகொடுத்து வேறு வழியின்றி போதை மருந்து வணிகத்துக்கு ஒப்புக் கொள்கிறான். பிறகு என்ன ஆனது?’ என்பதே கதை. ஆனால் இக்கதைக்குள் இயக்குநர் காட்டும் பின்னணியும் விழுமியங்களும் அவற்றுக்கான வசனங்களும்தான் வெறும் திரைப்படமாக இப்படத்தை நிறுத்தாமல் இலக்கியமாக்குகிறது.
வேறொரு நாட்டில் குடியேறுபவர்கள் எப்போதும் தங்களுக்கான பாதுகாப்பின் மீது பெரும் கவனம் கொண்டிருப்பார்கள். தன் இருப்பை உறுதி செய்வதற்காக குழுவாகவும் அதிகார மையமாகவும் அசைக்க முடியாத நிலைக்கு தங்களை ஆக்கிக் கொள்வார்கள். உலகளவில் இத்தகைய பாணிதான் நிலவுகிறது. அதனால் பல்வேறு கலாசார சமூக அரசியல்கள் கிளர்ந்தெழுந்து வரலாறுகள் உருவாகின்றன. அதேபோல இத்தாலியில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒருவன் தன்னுடைய இருப்பையும் குடும்பத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த ஒரு மாஃபியா சாம்ராஜ்யத்தைக் கட்டுவதாக இப்படம் விரிகிறது.
படத்தின் முதல் வசனமே 'I believe in America'தான்’.
அமெரிக்க வாழ்க்கைக்கு தன்னை பறிகொடுக்கும்போது என்னவாகிறது என்பதே படம் இயங்கும் களமாக இருக்கிறது. ரத்தம், துரோகம், பொய்கள் ஆகியவற்றைப் பிண்ணி ஓர் இத்தாலிய நிலப்பிரபுத்துவ சமூகத்தை சேர்ந்தவன் அமெரிக்க முதலாளித்துவத்துக்குள் அடியெடுத்து வைக்கும் upward mobility எனப்படும் ‘மேல்நோக்கிய நகர்வை’ படம் பிரதிபலிக்கிறது. முதலாளித்துவத்தைத் தோலுரிக்கும் வகையில் ‘I will make him an offer that he can't refuse' என்ற வசனம் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
‘அமெரிக்காவை நம்புகிறேன்’ என்கிற வசனத்துடன் தொடங்கும் படம் மனைவியிடமே வாய் கூசாமல் பொய் சொல்லும் நாயகனை ஆராதித்து தன் கதவை இறுதிக் காட்சியில் நம் முன் மூடிக் கொள்கிறது.
எந்தச் சிறந்தப் படத்தையும் எந்தவொரு கலை வெளிப்பாட்டையும் இன்றைய புரிதல் மற்றும் பொருத்தப்பாட்டிலிருந்து பார்த்து எடை போடுவது முட்டாள்தனம். அந்த கலை வெளிப்பாடு நிகழ்ந்த காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, அச்சமூக சூழலுடன் பொருத்திப் பார்த்து அதைப் புரிந்து கொள்வதுதான் நேர்மை, அறிவு, திறன் எல்லாம்.
பானை மற்றும் எழுத்து ஆகியவற்றின் பயன்பாடே குறைந்திருக்கும் இன்றையச் சூழலில் கீழடியில் கிடைக்கும் பானை எழுத்து கொடுக்கும் ஆச்சரியத்துக்கான காரணத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே கலை வெளிப்பாடுகளின் காலமும் அரசியலும் புரியும்.
திரையில் இக்காவியத்தை தவறாமல் பார்த்துவிடுங்கள்.