பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் கத்ரீனா கைஃப். இவருக்கும் நடிகர் விக்கி கௌஷலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இவர்களது திருமணம் வரும் டிச., 9ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.
விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப் திருமணத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்யும் உரிமையை, ஒரு OTT நிறுவனத்திற்கு அளித்துள்ளதாகவும் அதற்காக அந்த OTT நிறுவனத்துடன் 100 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப் திருமணம் நடக்கும் இடத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், கத்ரீனா-விக்கி கௌஷல் திருமண அழைப்பிதழ் என வைரலாகும் புகைப்படத்தில், “ஜெய்ப்பூரில் இருந்து ரன்தம்போருக்குச் செல்லும் சாலைப் பயணத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம். இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்கள் மற்றும் சாலைகள் வழியாக உங்கள் பயணத்தை அனுபவிக்கவும். வேடிக்கையான, அற்புதமான மகிழ்ச்சியான நிகழ்வுக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
தயவு செய்து உங்கள் மொபைல் போன்களை உங்களுக்கான அறைகளில் வைத்துவிடுங்கள். இந்த நிகழ்வுகளை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதை தவிர்க்கவும். உங்களைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு செய்தி நிறுவனமான பிங்க்வில்லாவின் தகவலின்படி, முன்னணி OTT தளம் கத்ரீனா-விக்கியின் திருமணத்தின் பிரத்யேக காட்சிகளைப் பெற 100 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்றும், இந்த OTT தளம் இந்த ஜோடியின் அனைத்து திருமண செயல்பாடுகளையும் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.