ஒழிவுதிவசத்தே களி என ஒரு மலையாளப் படம். இந்தியாவின் மிக முக்கியமான திரைப்படம். யூ ட்யூபிலேயே காணக் கிடைக்கிறது. பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகள் வென்ற திரைப்படம்.
‘ஒழிவுதிவசத்தே களி’ என்றால் ‘விடுமுறை நாள் கொண்டாட்டம்’ என அர்த்தம்.
ஒரு ஐந்து நண்பர்கள், தேர்தல் நாள் விடுமுறை அன்று, ஒன்று கூடி மது அருந்தி ஜாலியாக நாளைக் கழிக்க திட்டமிடுகின்றனர். ‘ஹேங் ஓவர்’ ஆங்கிலப் படத்தைப் போல் தோற்றமளிக்கும் ஒரு வரிக்கதை. ஆனால் இந்தியச் சூழலில் தன்மையில் குதூகலம் என்பது எதுவாக இருக்குமென்ற காட்டத்துடன் கதை விரிகிறது.
ஐந்து நண்பர்களில் நான்கு பேர் நான்கு வருணங்களை சேர்ந்தவர்கள். ஒருவர் பார்ப்பனர், ஒருவர் பார்ப்பனருக்கு அடுத்த நிலைச் சாதி, மீத இருவர் சூத்திர சாதிகள். மிஞ்சி இருப்பவர் ஒருவர். தலித்!
தேவையான அளவுக்கான பரபரப்பு கொண்ட கதைக்களம். ஆனால் நிதானமாக பயணிக்கிறது.
ஐவரும் ஒரு காட்டுக்குள் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் கூடுகின்றனர். அங்கு ஒரு பெண் சமையலாள் இருக்கிறார். மூவருக்கு அவர் மீது கண். ஆனாலும் பார்ப்பனருக்கு அடுத்த சாதியர்தான் அவரை அடைய முயற்சிக்கிறார். மூக்கறுபடுகிறார். ரிசார்ட்டில் இருக்கும் ஒரு மரத்தில் பலாப்பழம் இருக்கிறது. மரமேறி அதை பறிக்க தலித்தை பணிக்கின்றனர். அதே போல் கோழிக்கறி சமைக்க கோழியை கொல்ல வேண்டும். அதற்கும் தலித் பணிக்கப்படுகிறார். எல்லாம் விளையாட்டாக நடைபெறுவது போல் தெரிந்தாலும் தலித்துக்கு மட்டும் மனம் நெருடுகிறது.
கறி, மது, பாடல், அரசியல் பேச்சு என போதை தலைக்கேறுகிறது. தலித்தை கறுப்பு நிறத்தவர் என கிண்டலடிக்க, அவர் கோபமடைகிறார். ஏற்கனவே நேர்ந்த அவமதிப்புகளுடன் வெடித்தெழுந்து ‘கறுப்பு’ நிறத்தின் உண்மைத்தன்மையைப் பற்றிப் பாடுகிறார். மற்றவர்கள் தலித்தின் துயரத்தைப் பொருட்படுத்தவில்லை. அவரிடமிருந்து சிரித்தபடி மெல்ல நகர்ந்து பால்கனிக்கு செல்கின்றனர். ஏதேனும் விளையாட்டு விளையாடலாம் என ஆலோசிக்கின்றனர். ராஜா, ராணி விளையாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.
ராஜா, ராணி, திருடன், போலீஸ் என துண்டுச் சீட்டுகளில் எழுதி குலுக்கிப் போட வேண்டும். போலீஸ் சீட்டை எடுப்பவர் திருடன் யாரென சொல்ல வேண்டும். தவறாக சொன்னால் தண்டனை. விளையாட்டில் இல்லாத பார்ப்பனர்தான் தண்டனை அளிக்கும் நீதிபதி.
பார்ப்பன நீதியின்படி ஷத்திர, வைசிய, சூத்திரர்கள் ஆடும் விளையாட்டு. என்ன முடிவு என்பதை திரைப்படத்தில் பாருங்கள்.
மகத்தான அனுபவம் பெரும் அறிதலோடுக் கிடைக்கும்