மிக முக்கியமான பிரச்சினையை கையாண்டிருக்கிறது Sex Education என்னும் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்.
கோவையில் ஒரு மாணவி பாலியல் அச்சுறுத்தலால் தற்கொலை செய்து கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் பாலியல் கல்வி பற்றிய தேவை என்னவென்பதை Sex Education பார்க்கும் எவருமே எளிதாக புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே இரண்டு சீசன்கள் வெளியான நிலையில் இந்த வருடம் மூன்றாவது சீசனும் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்தியச் சூழலில் பலரும் பேசத் தயங்கும் தலைப்பு பாலியல். பள்ளிகளில் பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கும் சூழலில் உலகின் வல்லரசுகளில் ஒன்றாகவும் முற்போக்கு சமூகங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிற இங்கிலாந்தில் பாலியல் கல்வி பற்றிய பார்வையை Sex Education தொடர் காட்டுகிறது.
இந்தியச் சூழலுக்கும் இங்கிலாந்து சூழலுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை என்பதுதான் ஆச்சரியம்.
இந்தியச் சூழலில் பாலியல் பற்றிய பேச்சு ஒடுக்குமுறைக்கு எதிரான விஷயமாக பேசப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் தன்னுணர்தலின் முக்கியமான அம்சமாக பாலியல் கல்வி பேசப்படுகிறது.
இங்கிலாந்தில் மூர்டேல் என ஓர் உயர்நிலைப் பள்ளி. அதில் ஓடிஸ் என்பவன் படிக்கிறான். அவனது தாய் தனியாக இருப்பவர். பாலியல் ஆலோசனை வழங்கும் தொழில் செய்து வருபவர். பாலுறவுத் தேவைக்காக பல ஆண்களுடன் தொடர்பில் இருப்பவர். பாலியல் சுதந்திரம் கொண்ட பெண். ஓடிஸுக்கு தாயின் வெளிப்படைத்தன்மை அசவுகரியம். அதனாலேயே பள்ளியில் தாயைப் பற்றி பேச்சு வந்தாலும் அதிகம் பொருட்படுத்தாமல் இருக்கிறான்.
அதே பள்ளியில் மேவ் என்கிற பெண் படிக்கிறார். வீடின்றி ட்ரக்கில் வாழும் ஒரு விளிம்பு நிலைப் பெண் அவர். இயல்பாகவே அவருக்குள் சமூகத்தின் போலித்தனங்களை எதிர்க்கும் குணம் இருக்கிறது. சமூகத்தின் போலித்தனங்களை எதிர்ப்பதாலேயே நாயகத்தன்மையைக் கொடுத்துவிடாமல், அவருக்கு இருக்கக் கூடிய சூழலின் இயல்பில் அவர் உலவ விடப்படுகிறார். ஒரு பாலுறவில் அவருக்கு உருவாகும் கருவை கலைக்கும் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். ஓடிஸ் அப்போது அவருக்கு உதவுகிறான்.
மேலும் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் இந்த இருவரும்தான் பிரதானக் கதாபாத்திரங்கள். பதின்வயதுகளில் இருக்கும் சக மாணவர்களின் பாலியல் சிக்கல்களுக்கான ஆலோசனையை தாயின் சாயலில் ஓடிஸ் வழங்குகிறான். மெல்ல அந்த யோசனைகள் பிரபலமாகி மாணவர்களுக்கு மத்தியில் மட்டும் இயங்கும் ஒரு பாலியல் மருத்துவ மையத்தை (Sex Clinic) மேவும் ஓடிஸ்ஸும் தொடங்குகிறார்கள். பரவலாக பல மாணவர்களின் பாலியல் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படுகின்றன.
சுயமைதுனம், தற்பாலினசேர்க்கை, கலவி, கரு உண்டாகுதல், கருக்கலைப்பு, இணை கவர்தல், இணை பிரிதல் என பலவகை உறவு மற்றும் பாலியல் கேள்விகளுக்கு பதில்கள் தொடரின் வழியாக மக்களுக்கு வழங்கப்படுகிறது.
சுயமைதுனம் செய்யத் தெரியாமல் தவிக்கும் ஓடிஸ், மேவ் நிராகரிப்பதால் தோல்வியில் தவிக்கும் முதல் காதலன், முரட்டுத்தனமான ஆடமை நிராகரிக்கும் காதலி, ஆடம் சீண்டி துன்புறுத்தும் தற்பாலின சேர்க்கையாளரான எரிக், மோதல் சரியாகி இருவரையும் இணைக்கும் காதலுறவு, பாலியல் மருத்துவ மையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிற்போக்கு தலைமை ஆசிரியர், ஓடிஸ்ஸின் தாய்க்கு ஏற்படும் புதுக் காதல், மேவுக்கும் ஓடிஸ்ஸுக்கும் இடையே தோன்றும் காதல் எனப் பயணித்து இறுதியில் ஓடிஸ் சுயமைதுனம் செய்ய முடிவதாக முடிகிறது முதல் சீசன்.
ஓடிஸ்ஸுக்கும் மேவுக்கும் இடையே இருக்கும் மெல்லிய இழையான காதல் வெவ்வேறு மாணவர்களின் தலையீடுகளாலும் புது உறவுகளாலும் குழம்புகிறது. மேவிடமிருந்து பெரிய எதிர்வினை இல்லாததால் தாயின் காதலனின் மகளுடன் ஓடிஸ்ஸுக்கு உறவு தோன்றுகிறது. தாயின் உறவால் அந்த பெண் தங்கை முறைக்கு மாறுவதால் கோபம் கொள்கிறான். தாயின் காதலனுடன் அவன் பழகுவதில் அசவுகரியம் கொள்கிறான். ஆடமுக்கும் எரிக்குக்கும் இடையே இருக்கும் உறவு ஆரோக்கியமாக இல்லை. தாயின் காதலனின் மகள் பாலுறவுக்கு தயார் என முன்வரும்போதும் ஓடிஸ்ஸிடம் தயக்கம் இருக்கிறது. தாயின் காதல் மற்றும் மேவ் மீது கொண்டிருக்கும் காதல் என அவன் உழலுகிறான்.
மேவின் முறிந்த காதல், தாயின் புதிய காதல், தாயின் காதலன் மகளுடன் ஓடிஸ்ஸுக்கு இருக்கும் புரியாத உறவு, ஆடம் மற்றும் எரிக் இடையில் இருக்கும் ஆரோக்கியமற்ற உறவு, பள்ளி நிர்வாகத்தின் கெடுபிடித்தனம், மனநல பாதிப்பு கொண்ட மேவின் தாய், பாலியல் விருப்பு மாறுபாடு, நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை எதிர்த்து நடத்தப்படும் ‘ரோமியோ-ஜூலியட்’ நாடகம், மேவுக்கான காதலை தெரிவித்து ஓடிஸ் அனுப்பும் குறுந்தகவலை அழிக்கும் மேவின் புது நண்பன் என இரண்டாம் சீசன் முடிகிறது.
மேவ்-ஓடிஸ் சேர்ந்தார்களா, ஆடம் மற்றும் எரிக்கின் உறவு என்னவானது, புதிய காதலனால் கர்ப்பம் அடைந்த ஓடிஸின் தாய்க்கு என்னவாகிறது முதலிய பல விஷயங்களை இனவெறி பிடித்த, பிற்போக்குத்தனமான ஒரு பெண் தலைமை ஆசிரியரின் ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் மாணவர்களின் கதையாக மூன்றாம் சீசன் விரிகிறது.
மேலே சொல்லப்பட்ட கதையே அசவுகரியம் கொடுக்கக் கூடிய சமூகச் சூழலில்தான் இருக்கிறோம். ஆனால் காலமோ புதிய தலைமுறைகளோ நம் ஒப்புதல்களுக்கு காத்திருப்பதில்லை. பிரசாரமாக எளிதில் மாறக் கூடிய களத்தை அழகான கதைக்களத்தில் நகைச்சுவை கலந்து அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள்.
பார்த்து விடுங்கள்!