சினிமா

சமுத்திரக்கனியின் 'விநோதய சித்தம்' எப்படி இருக்கிறது?

தற்போது நமக்கு இருக்கும் புரிதல், அறிதல் கொண்டு வாழ்க்கையில் பின்னோக்கிச் சென்று முதலில் இருந்து வாழ முடிந்தால் எப்படி இருக்கும்?

சமுத்திரக்கனியின் 'விநோதய சித்தம்' எப்படி இருக்கிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

'விநோதய சித்தம்' என ஒரு படம் வெளியாகியிருக்கிறது. தமிழ்ப்படம்தான். வார்த்தைகள் வித்தியாசமாக தெரியலாம். கதைக்களமும் வித்தியாசம்தான்.

‘முதல்வன்’ படத்தில் சுஜாதா ஒரு வசனம் எழுதியிருப்பார்: ‘வாழ்க்கையில ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?’. தற்போது நமக்கு இருக்கும் புரிதல், அறிதல் கொண்டு வாழ்க்கையில் பின்னோக்கிச் சென்று முதலில் இருந்து வாழ முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

விநோதய சித்தம் படத்தின் களமும் இதுதான்.

சரியான வயதில் திருமணம் செய்துகொண்டு, குழந்தை குட்டிகளை பெற்றுப் போட்டுவிட்டு, ஓர் அலுவலகப் பணியை 26 வருடங்களாக விடாமல் இறுக்கமாக கட்டிக்கொண்டு வாழ்க்கை ஓட்டுபவன் நாயகன். அவனது வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? அக்கம்பக்கம், குடும்பம், கடமை, பணம் என வாழ்க்கையின் எல்லாவற்றையும் வரையறைகளுக்குள்ளிருந்தே சிந்திக்கும் நாயகனுக்கு ஒருநாள் மரணம் ஏற்படுகிறது. உடல் நீங்கும் ஆத்மா காலத்திடம் மன்றாடுகிறது. தனக்கான கடமைகள் பல இருப்பதாக கெஞ்சி கொஞ்ச காலம் வாழ அனுமதிக்குமாறு கேட்கிறது. 90 நாட்கள் கெடுவுடன் மீண்டும் வாழ அனுமதிக்கப்படுகிறான் நாயகன். என்ன நடக்கிறது என்பதே மிச்சக்கதை.

கடவுள், எல்லாவற்றையும் விடப் பெரிய சக்தி, பரலோகம், சொர்க்கம் என்றெல்லாம் கதையைப் பின்னாமல் நாயகனை மரணத்தின்மூலம் அழைத்துச் செல்ல வருவது காலம் (Time) என சொன்னதற்கே இயக்குநரைப் பாராட்டலாம். காலத்தை ஒரு மனிதனாக உருவகித்து அந்த மனிதனாக நடித்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. தன் பாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போது சமுத்திரக்கனி, ‘ஒரே நேரத்தில் ஒரு கோடி நதிகளில் நீராடும் சூரியனை போன்றவன் யாம் எங்கும் நிறைந்திருப்பவன்’ எனச் சொல்வது கம்பீரம் மட்டுமல்ல, காலம் எத்தனை சாசுவதமானது என்பதை உணர்த்துவதும் கூட.

சமுத்திரக்கனியின் 'விநோதய சித்தம்' எப்படி இருக்கிறது?

அறிவியலைப் பொறுத்தவரை பிரபஞ்சம் தொடங்கியதாக நாம் கணக்கிடும் புள்ளியிலிருந்து காலம் பிறக்கிறது. அந்த முதல் பெருவெடிப்பு தொடங்கி நெபுலாக்கள், கேலக்சிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள், நாடுகள், மனிதர்கள், எறும்புகள், இந்த கணிணி எழுத்துகள் வரை நாம் விளக்குவதற்கு அடிப்படையாகக் கொள்வது Time என்னும் காலத்தைதான். நம் வாழ்க்கை உட்பட்ட மொத்த இயக்கத்தையும் காலத்தின் பார்வையிலிருந்து பார்த்தால் எத்தனை சுவாரஸ்யமாக இருக்கும்?

காலப் பின்னணியிலிருந்து கதை சொல்லும் படங்கள் உலகளவில் பல வெளியாகி இருக்கின்றன. Time Travel அல்லது Time Loop பாணி படங்கள் நம் தலைகள் சுற்றுமளவுக்கு காலத்தைப் பற்றி பேசினாலும் நமக்கு சுவாரஸ்யம் குறைவதில்லை. காலம் நம் வாழ்க்கைகளில் நிகழ்த்தும் மர்மங்கள் காரணமாக இருக்கலாம். Netflix-ல் வெளியான Dark தொடர் தலைசுற்றலை மீறி ரசித்ததற்கான ஓர் உதாரணம்.

’விநோதய சித்தம்’ படம் காலத்தை குடும்பத்துக்குள் வைத்துப் பார்க்கிறது. பணம் கட்டமைத்த வாழ்க்கையின் பின் ஓடும் மனிதனின் பார்வையில் குடும்ப உறவுகளும் உணர்வுகளும் எத்தனை தவறாக எடை போடப்படுகிறது என்பதை அறிய காலம் அந்த மனிதனுக்கு மறுவாய்ப்பை வழங்கி கற்பிக்கிறது.

நாயக பாத்திரமாக தம்பி ராமய்யா வருகிறார். அவரின் இயல்பில் நடித்திருக்கிறார். குடும்பத்துக்குள் காலம் என்பதால் உறவு மோதல்கள், உணர்வுப்பூர்வ காட்சிகள் என மெலோட்ராமா நெடி சற்று தூக்கலாக இருக்கிறது. ’காலம்’ என்கிற களத்தை ஓடிடியில் எடுக்கும்போது ஏற்கனவே அத்தகைய படங்களையும் தொடர்களையும் பார்த்து பழகியிருக்கும் ஓடிடி ரசிக மனதுக்கு ‘காலம்’ பற்றிய அறிவியலையும் சேர்த்து கொஞ்சம் விளையாட்டு காட்டியிருக்கலாம். எனினும் நாம் வாழும் வாழ்க்கை பற்றிய மாற்றுக் கோணம் மற்றும் மாற்றுப் பார்வை வழங்கியதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார். படத்தை Zee5 ஓடிடி தளத்தில் காணலாம்.

banner

Related Stories

Related Stories