கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் `ஜகமே தந்திரம்'. இந்தப் படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால், நேரடியாக இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்தது தயாரிப்பாளர் தரப்பு.
அதன்படி படம் ஜூன் 18ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஏற்கனவே படத்துக்கான டீசர், ரகிட ரகிட பாடல், புஜ்ஜி, நேத்து என இரண்டு வீடியோ பாடல்களையும் ரிலீஸ் செய்திருந்தார்கள். படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. படம் ரிலீஸ் ஆக சில நாட்களே இருப்பதால், ப்ரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ஒரு சுவாரஸ்ய தகவலை சொல்லியிருந்தார்.
படத்தில் புஜ்ஜி மற்றும் நேத்து என இரண்டு வீடியோ பாடல்கள் வெளியிடப்பட்டது. இரண்டுமே ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. ஆனால், இந்த இரண்டு பாடல்களுமே படத்தின் புரோமோஷனுக்காக வெளியிடப்பட்டவைதான். படத்தில் இந்த இரண்டு பாடல்களும் இடம்பெறாது என்று கூறப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் எல்லா பாடல்களையும் ஜூன் 7ம் தேதி வெளியிடப்போகிறோம் என அறிவித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசைக்கு தனி ரசிகர்கூட்டம் இருப்பதால், இந்தப் பாடல்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரையிலிருந்து லண்டன் செல்லும் டான், அவர் என்ன பிரச்சனையை சந்திக்கிறார்? என்பதுதான் படத்தின் கதைக் களமாக இருக்கும் என ட்ரெய்லர் பார்க்கும்போது புரிகிறது. இந்தப் படம் தமிழ் மட்டுமில்லாமல், இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. கூடவே ஆங்கிலத்துலயும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.