தமிழ் சினிமா ரசிகர்களிடம் தெலுங்கு சினிமாவை பாகுபலிக்கு முன் பாகுபலிக்கு பின் என்று இரு பிரிவுகளாகவே பிரித்து பார்க்க முடியும், இந்திய சினிமாவில் அது ஏற்படுத்திய பாதிப்பு அந்த அளவில் இருந்தது. அதைத் தாண்டி தனியார் தொலைக்காட்சியில் ஓயாமல் ஒளிபரப்பாகி வரும் தமிழில் டப் செய்யப்பட்ட தெலுங்கு படங்களை பார்த்து, டோலிவுட் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டிருப்பது உண்மையே. ஆனால் அந்த டப்பிங் படங்களை தாண்டி சில நல்ல படங்களும் தெலுங்கு சினிமாவில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா (Agent Sai Srinivas Athreya) 2019
முற்றிலும் புதுமையான நகைச்சுவை திரில்லர் படமான இதை ஸ்வரூப். ஆர்.எஸ்.ஜெ என்பவர் இயக்கியுள்ளார். வித்தியாசமான உடையை அணிந்துகொண்டு, பழைய பியட் காரில் சென்று சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற கதாபாத்திரத்தில் நடித்த, "நவீன் பொல்லிஷெட்டி" செய்யும் விசாரணைகள் அனைவரும் ரசிக்கும் வண்ணமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு முக்கிய பிரச்சனையையே கருவாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் சிறிய சிறிய பிரச்சனைகளை தீர்த்து வைத்துக்கொண்டும், ஷெர்லாக் ஹோம்ஸை கடவுளாக வழிபட்டுக்கொண்டும் நகைச்சுவையாக நகரும் கதை இரண்டாம் பாதியில், மிகவும் விறுவிறுப்பான திருப்பங்களை கொண்டதாக இருக்கின்றது.
மஜிலி ( Majili) 2019
சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான இப்படம் வழக்கமான காதல் கதைகள் முடிகின்ற இடத்தில் இருந்தே, இப்படத்தின் கதை துவங்குவதாக அமைந்திருக்கின்றது. நிஜ வாழ்க்கையிலும் ஜோடியான சமந்தா அக்கினேனி மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கிரிக்கெட் பின்னணியில் அமைந்திருக்கக்கூடிய இப்படம், கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்னைகளை விவாதிக்கக் கூடியதாக இருக்கின்றது. திருமணத்திற்குப் பின் இருக்கும் காதலை காட்டுவதாக இருக்கிறது. நாக சைதன்யா, சமந்தா கல்யாணத்திற்கு பின் இருவரும் இணைந்து நடித்து வெளியான முதல் படமாக இது இருப்பது கூடுதல் சிறப்பு.
ரங்கஸ்தலம் (Rangasthalam) 2018
சுகுமார் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ராம்சரண் மற்றும் சமந்தா இணைந்து நடித்த படம் ‘ரங்கஸ்தலம்’. மசாலா படங்களுக்கென பெயர் போன நடிகரான ராம்சரணுக்கு, அந்த மசாலா வாசம் மாறாமல் புது விதமான கதையாக இது அமைந்திருக்கின்றது. காது கேளாத விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராம் சரண், விவசாயியான சமந்தா மீது காதல் கொள்கிறார். ரங்கஸ்தல கிராமத்தை, பஞ்சாயத்து தலைவர் பஹிந்த்ரா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதோடு விவசாய நிலத்தின் மேல் வட்டிக்கு காசு குடுக்கும் நபராகவும் இருக்கிறார். அதிக வட்டியில் கடன் குடுத்து மக்களை கட்டுப்படுத்தி அதிகாரம் செய்து வரும் பஹிந்த்ராவிற்கும் ராம் சரணுக்கும் மோதல் ஏற்படுகிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
ஈ நகராணிகி ஏமண்டி ( Ee Nagaraniki Emaindi ) 2018
தருண் பாஸ்கர் தஷ்யம் இயக்கத்தில் வெளியான இப்படம், நான்கு நண்பர்களின் வாழ்க்கையை உணர்ச்சிமிக்க கதைப் பின்னணியில் காட்டுவதாக அமைகின்றது. கல்லூரி காலத்தில் ஒன்றாக சுற்றித் திரிந்த நண்பர்கள் கல்லூரியைக் கடந்து வாழ்க்கைக்குள் நுழையும்போது, அவர்களுக்குள்ளே சிறிய விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. அதனைச் சரி செய்ய அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. கல்லூரி காலத்தில் அவர்கள் எடுக்க முடியாமல் போன குறும்படத்தையும் எடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். அதுவே அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை அளிப்பதாக அமைகிறது. உள்ளூரை விட்டுட்டு எங்கும் நகரமுடியாமல் இருக்கும் இளைஞர்களுக்கு, இந்த படம் ஒரு உணர்ச்சிமிக்க பயணமாகவே அமையும்.
C/O காஞ்சரபாலம் ( C/O Kancharapalem ) 2018
மஹா வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான இப்படம், சுப்பாராவ் என்பவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த காதலை வெளிப்படுத்தும் விதமாக இருக்கின்றது. காஞ்சரபாலம் என்னும் ஊரை சுற்றி கதை அமைந்திருக்கின்றது. அங்கு வாழும் 80க்கும் மேற்பட்ட மக்களையே நடிகர்களாக இப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர். வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் நான்கு காதல் கதைகள், அந்தந்தக் காதலுக்கு எதிர்ப்பாக இருக்கும் ஜாதி, மதங்களின் பிரச்னையை பேசுகிறது. சிறிதும் தொடர்பின்றி நகரும் நான்கு கதைகளும் இறுதியில் இணைக்கப்படும் விதம் வியக்கத்தக்க வகையில் இருப்பது இதன் வெற்றி.