இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மகாராஷ்டிர மாநிலம் அதிகபடியான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அதில் மும்பை மாநகரத்தில் 400க்கும் மேலானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு நிதி உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்காக தனக்குச் சொந்தமான 4 மாடி கட்டடத்தை மும்பை மாநகராட்சி பயன்படுத்திக்கொள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் அவரது மனைவி கவுரி கானும் அனுமதியளித்துள்ளனர்.
அனைத்து அத்தியாவசிய தேவைகள் அடங்கிய கட்டடத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திருப்பது சமயத்திற்கு ஏற்ற செயல் எனக் குறிப்பிட்டு, மும்பை மாநகராட்சி நிர்வாகம், ட்விட்டரில் ஷாருக்கான் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஷாருக்கான் மற்றும் கவுரி கானுக்கு சொந்தமான ரெட் சில்லி என்டெர்டெயின்மென்ட், கொல்கத்தா ஐ.பி.எல் அணி நிர்வாகம் சார்பில் மகாராஷ்டிர முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், பிரதமர் நிவாரண நிதிக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ பணியாளர்களுக்கென 50 ஆயிரம் பாதுகாப்பு உபகரணங்களும், மும்பையில் 5,500 குடும்பத்தினருக்கு ஒரு மாதத்துக்கு தினந்தோறும் உணவு என பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.