இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு தினசரி அதிகரித்து வரும் அதே வேளையில் ஊரடங்கு காரணமாக தொழில் ஈட்ட முடியாமல் வியாபாரிகள் பலர் நொந்து போயுள்ளனர். இதற்காக அரசுத் தரப்பில் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டாலும், அது, சரியான நேரத்தில் முறையாக சென்றடைகிறதா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
இப்படி இருக்கையில், 21 நாட்கள் ஊரடங்குக்குப் பிறகு கொரோனா வைரஸின் பாதிப்பை பொறுத்துப் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால் மத்திய அமைச்சரவை செயலாளரோ இதுவரை ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியின்போது தெரிவித்திருந்தார். இதனால், வியாபாரிகள், தினக்கூலித் தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் சமூக வலைதளம் மூலம் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில், “இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்புகள் முழுவதும் முடிவுக்கு வந்த பிறகு நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சில நன்மைகளைச் செய்வோம்.
வெளிநாடுகளுக்கு எங்கும் செல்லாமல் இந்தியாவில் விடுமுறை நாட்களை செலவிடுங்கள். நமது நாட்டில் உள்ள உள்ளூர் உணவகங்களில் சாப்பிடுங்கள். பழங்கள், காய்கறிகளை உள்ளூர் சந்தைகளில் வாங்குங்கள். இந்தியாவில் உற்பத்தியாகும் துணிகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குங்கள். உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வு முன்னேற்றமடைய நாம் ஆதரிப்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காஜல் அகர்வாலின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் வரவேற்பளித்துள்ளனர்.