ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் முதல் முறையாக உருவாகி வரும் படம் ’தர்பார்’ . போலிஸ் அதிகாரியாக ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு அருணாச்சலம் என்ற பெயரில் ரஜினி நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2020 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்பார் ரிலீசாக இருப்பதால் படத்தின் ஷூட்டிங் வேலைகள் அனைத்தும் முடிந்து பின்னணி பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் சென்னையில் மிக பிரமாண்டமாக தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
முன்னதாக அண்மையில் வெளியான படத்தின் மோஷன் போஸ்டரும், அதன் பின்னணி இசையும் ரசிகர்களைக் கவர்ந்ததால் ஆடியோ வெளியீடு, டீசர், ட்ரெய்லர் என தர்பார் பட அடுத்தத்தடுத்த அப்டேட்டுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில், தர்பார் படத்துக்கான ரஜினியின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக நவ.,14ம் தேதி படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது ரஜினியின் பகுதிக்கான டப்பிங் வேலைகள் முடிந்துவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், முருகதாஸும், ரஜினியும் பேசிக்கொண்டிருப்பது போல புகைப்படத்தை இணைத்து, " என் வாழ்க்கையின் மிகச்சிறைந்த டப்பிங் பணிகளில் ஒன்று... ரஜினியின் தர்பார் டப்பிங் முடிவடைந்துவிட்டது" என பதிவிட்டுள்ளார்.