தமிழ், மலையாளப் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அமலா பால்.இயக்குநர் விஜய்யுடன் ஏற்பட்ட மன முறிவுக்குப் பிறகு தற்போது கரியரில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.தற்போது ஆடை, அதோ அந்த பறவைப் போல, ஆகிய படங்களிலும் 3 மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். ‘அமலா ஹோம் புரொடக்ஷன்ஸ்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், ’கடவர்’ எனும் படத்தை இவர் தயாரிக்கிறார்.இந்தப் படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கிறார் அமலா பால்.
இதைப்பற்றி அவர், “ஒரு கலைஞராக, கடந்த காலத்தில் ஸ்டைலான மற்றும் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். ஒரு நடிகையாக என்னை உந்தும் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் ரசிக்கிறேன். அத்தகைய ஒரு முடிவை எடுத்த பிறகு அதோ அந்த பறவை போல, ஆடை படங்களுக்கு பிறகு கடவர் கதையை கேட்டேன்.
இந்தப் படத்திற்காக நான் மிகவும் தயாராக வேண்டியிருந்தது. கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் உமா டத்தனால் எழுதப்பட்ட ‘ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் புத்தகத்தை வாசித்தும், தடய நோயியல் நிபுணர்களுடன் நேரத்தை செலவிட்டும் இருக்கிறேன்” என்றார்.இதில் அதுல்யா, ஹரீஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.