சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளிர் பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வருடங்களாக கோடையில் 40 முதல் 45 டிகிரி வரை வெப்பம் பதிவாகி கடும் வெப்ப அலை வீசியது.
வெப்பத்தின் அளவு அதிகரித்ததால் ஐரோப்பாவில் பல நாடுகளில் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டு மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுது. அதிலும் ஸ்பெயின் உள்ளிய நாடுகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பருவநிலை மாற்றத்தின் அடுத்த கட்டமாக ஸ்பெயினில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு அதனால் 200 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 30 அன்று ஸ்பெயினின் வலென்சியா பகுதியில் கனமழை பெய்தது.
குறைவான நேரத்தில் திடீரென அதீத அளவு மழை பெய்த நிலையில், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போதுவரை 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெள்ளத்தில் கார்களும், பாலங்களும் அடித்துச்செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி உலகையே அதிக வைத்துள்ளது.
கடந்த 1973ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 150 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ள பாதிப்பாக இது பதிவாகியுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக 3 நாட்களுக்கு தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் ஸ்பெயின் அரசாங்கம் அறிவித்துள்ளது.