கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹிஸ்புல்லா உள்ளிட்ட லெபனான் நாட்டில் ஆயுதக் குழுவினர் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெற்ற இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த 10 பேர் கொல்லபட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தளபதி இப்ராஹிம் அகில் கடந்த 1983ம் ஆண்டு அமெரிக்க தூதரகம் மீது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமானவர் என்று அமெரிக்கா கருதி அவர் தலைக்கு 7 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு தொகை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.