கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.
தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
எனினும் தற்போது மீண்டும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் பென்சில்வேனியாவில் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அங்கிருந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டிரம்ப்பை நோக்கி சுட்டுள்ளார். இதில் டிரம்ப்பின் காதில் அந்த தோட்டா உரசிச்சென்றது. தொடர்ந்து டிரம்ப்பின் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டவரை உடனடியாக சுட்டு வீழ்த்தினர்.
ரத்தம் சொட்டிய நிலையில், டிரம்ப்பை பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். எனினும் இந்த காயத்தில் இருந்து மீண்ட டிரம்ப் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஏடுபட்டு வந்தார். இந்த நிலையில், மீண்டும் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் தனது வீட்டில் இருக்கும் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடி வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த ஒருவர் டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் டிரம்பி காயமின்றி தப்பிய நிலையில், அவர் மீது தாக்குதல் நடத்தியவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை. டிரம்புக்கு தேவையான உரிய பாதுகாப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் “ எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.