இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் முக்கிய நகரமான கத்சிரின் என்ற நகரின் மீது ஹிஸ்புல்லா ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் கோலன் குன்றுகளில் உள்ள Katzrin என்ற நகரம் மீது ஹிஸ்புல்லா 50க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதில் ஏராளமான ராக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும், சில ராக்கெட்டுகள் குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஹிஸ்புல்லா தாக்குதலால் சுமார் 1 லட்சம் இஸ்ரேலிய குடிமக்கள் எல்லைப்புறங்களில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.