இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
ஹமாஸ் மீதான தாக்குதலை அறிவித்தபோதே ஹமாஸை முழுவதுமாக அழித்துவிட்டுதான் இந்த போரை முடிப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். அதன்படி இந்த தாக்குதலில் ஏராளமான ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஹமாஸின் துணை அரசியல் தலைவர் சலே அல்-அரூரி மற்றும் ஹமாஸின் ராணுவப் பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசா ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியனின் பதவியேற்பு விழாவுக்காக இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெக்ரான் சென்றிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்மாயில் ஹனியேவின் இறப்பு குறித்து ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் , தற்போது அதனை ஹமாஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது. பாலஸ்தீனிய மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கும், உலகின் அனைத்து சுதந்திர மக்களுக்கும் ஹமாஸ் இரங்கல் தெரிவித்து கொள்கிறது என்று ஹமாஸ் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. இஸ்மாயில் ஹனியே பாலத்தீன அரசின் பிரதமராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஹமாஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் இஸ்மாயில் ஹனியேம் படுகொலை குறித்து இஸ்ரேல் சார்பில் எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.