உலகம் முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று தான் கொரோனா. இந்த பெருந்தொற்றின் காரணமாக நாள்தோறும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டது. தினமும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நோய் தொற்று பரவ கூடாது என்பதால் அந்தந்த நாட்டு அரசு அதற்கான நடவடிக்கை மேற்கொண்டது.
இதனால் லாக் டவுன் போடப்பட்டு மக்கள் பலரும் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மாஸ்க் அணிவது, சுத்தமாக இருப்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தடுப்பூசி கண்டறிந்து, அதனை மக்கள் செலுத்திய பின்னரே, கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்தது. எனினும் சிலர் உயிரிழந்தே வந்தனர்.
இந்த தடுப்பூசியானது ஸ்புட்னிக், கோவிஷீல்ட், கோவாக்சின் என பலவகையாக தயாரிக்கப்பட்டு மக்கள் உயிர் காப்பாற்றப்பட்டது. தற்போது கொரோனா அலை ஓய்ந்துள்ள நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேற தொடங்கியது. கொரோனா தடுப்பூசி போட்ட சில மாதங்கள் கழித்து இந்தியாவில் இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வரும் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இந்த சம்பவம் வயதானவர்களுக்கு வரும் மாரடைப்பு போன்ற திடீர் மரணங்கள் தற்போது சிறுவர்கள், இளைஞர்களுக்கும் ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் கொரோனா தடுப்பூசி என்ற செய்தியும் பரவியது. இதனால் மக்கள் மத்தியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் அரங்கேறியது.
மேலும் மாரடைப்பு இறப்பு மட்டுமின்றி, உடல் உறுப்புகள் பாதிப்பும் பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் இதுகுறித்து பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியால் சில பக்கவிளைவுகள் ஏற்படுவதாக பிரிட்டன் மருந்து நிறுவனம் அந்நாட்டு நீதிமன்றத்தில் ரிப்போர்ட் தாக்கல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவின் (AstraZeneca) கோவிட் மருந்தால் பல பக்கவிளைவுகள் ஏற்படுவதாகவும், இரத்தம் தொடர்பான பிரச்னை ஏற்படுவதாகவும் பிரிட்டன் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்த குற்றச்சாட்டை அந்நிறுவனம் முற்றிலும் மறுத்து வந்தது.
இதையடுத்து இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது இது தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கோவிஷீல்டு தடுப்பூசியால் சில அரிய பக்க விளைவுகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிஷீல்டு மிகவும் அரிதான நேரங்களில், TTS எனப்படும் (த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்) என்ற பிரச்னையை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
TTS என்பது இரத்தம் உறைதல் பிரச்னையை ஏற்படுத்தும். அதோடு இவை இரத்த பிளேட்லெட்களின் எண்ணிக்கையையும் குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து நிறுவனம் இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்துள்ள நிலையில், தற்போது உலகம் முழுவதும் இந்த செய்தி பெரும் சலசலப்பையும் மக்கள் மனதில் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.