நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக பாலியல் தொடர்பான பிரச்னைகள். ஆனால் அண்மையில் பாலியல் தொடர்பான குற்றங்களில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக பல நாடுகளின் அரசுகள் விழிப்புணர்வு, புதிய சட்டம் உள்ளிட்டவையை அமளிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்திய அரசு 2012-ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு POCSO என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டம் மூலம் பல குற்றவாளிகள் இந்தியா முழுவதும் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வருகின்றனர். எனினும் குற்றங்கள் பெரிதளவு குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களது ஆண்மை நீக்கம் செய்யப்படுவதாக மடகாஸ்கர் நாடு அதிரடியாக சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது மடகாஸ்கர் தீவு. 2 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், அண்மை காலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த சூழலில் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அந்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் லாண்டி ம்போலாட்டியான தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் சுமார் 600 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஜனவரியில் மட்டும் 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தகவலை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த குற்றங்களில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் ஆண்மையை பறிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி ஒருவர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டால் அவரது ஆண்மை பறிக்கப்படும்.
இந்த புதிய சட்டத்தின்படி குற்றவாளிக்கு chemical castration செய்யப்படும் என்றும், இன்னும் சில மோசமான வழக்குகளில் அறுவைசிகிச்சை மூலம் castration செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் கடந்த பிப் 11-ம் தேதி நிறைவேற்றப்பட்டு, அந்நாட்டின் அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பட்டுள்ளது. அதிபர் ஒப்புதலுக்கு பிறகே இந்த சட்டம் அமளிப்படுத்தப்படும்.
மடகாஸ்கர் அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகின்றனர். எனினும் மற்ற நாடுகளில் இது சரியான சட்டம் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.