ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசு நாட்டில் நபர் ஒருவர் சுமார் 1 மில்லியன் டாலரை பண மழையாக பொழிந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. செக் குடியரசு நாட்டில் பிரபல இயக்குநராக அறியப்படுபவர் கஸ்மா காஸ்மிட்ச் (Kazma Kazmitch) என்று சொல்லப்படும் கமில் பார்டோசெக் (Kamil Bartošek)
இவர் தனது ஒன் மேன் ஷோ (One Man Show) என்ற படத்தில் ஒரு குறியீட்டை வைத்து, அதனை தீர்க்கும்படி போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அந்த போட்டியில் பணம் இருக்கக்கூடிய இடம் மறைந்திருந்தது. ஆனால் துரதிர்ஷவசமாக அதனை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே தன்னிடம் இருந்த பணத்தை மழையாக பொழிய திட்டமிட்டார்.
அதன்படி இந்த போட்டியில் பங்கேற்ற மக்களுக்கு இ-மெயில் மூலம் தனது முடிவை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று, தன்னிடம் இருந்த சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8 கோடியே 32 லட்சத்து 56 ஆயிரத்து 450) பணத்தை தனது ஹெலிகாப்டர் மூலம் மேலே இருந்து பறக்கவிட்டார். அவ்வாறு பறந்த பணத்தை, மக்கள் ஆரவாரத்தோடு அள்ளி சென்றனர்.
சுமார் 4 ஆயிரம் பேர் அந்த பணத்தை எடுத்து சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள கஸ்மா, “உலகின் முதல் உண்மையான பண மழை! செக் குடியரசில் ஹெலிகாப்டரில் இருந்து $1.000.000 கைவிடப்பட்டது, யாரும் இறக்கவில்லை அல்லது காயமடையவில்லை." என்று பதிவும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.