அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஹாரிஸ்ன் ஏர் எம்பரர் இ 175 என்ற விமானம் வாஷிங்டனில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 80 பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர்.
இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானிகள் அறை அருகே இருந்த நபர் விமானிகள் வெளியேறும் நேரத்தில் திடிரென உள்ளே நுழைந்து விமானத்தின் என்ஜின்களை ஆப் செய்ய முயன்றுள்ளார். இதனைக் கண்ட விமானத்தின் கேப்டனும் முதல் அதிகாரியும் துரிதமாகச் செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தினர்.
இதன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் உடனடியாக அருகே இருந்த ஓரிகான் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தின் என்ஜின்களை ஆப் செய்ய முயன்ற நபரை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபரின் பெயர் ஜோசப் எமர்சன் (வயது 44) என்பதும், அவர் விமானியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அவர் மீது விமானத்தில் இருந்த பயணிகளை கொலை செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம், " விமானத்தில் காக் பிட் அருகே இருந்த நபர் எஞ்சினை நிறுத்த முயன்றுள்ளார். இருப்பினும் விமானிகள் செயலால் விமானம் பாதுகாப்பாக இருந்தது. முன்னெச்சரிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.