இந்தியாவில் ஒருகாலத்தில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை பெரிய அளவில் எழுந்த நிலையில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் நடவடிக்கை காரணமாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்தியாவில் காலிஸ்தான் கோரிக்கை முடிவுக்கு வந்தாலும், இந்தியாவுக்கு வெளியே சீக்கியர்கள் அதிகம் வாழும் கனடாவில் அந்த கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
சீக்கியர்கள், கனடா நாட்டு மக்கள் தொகையில் செல்வாக்கு செலுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அவர்களின் இந்த கோரிக்கையால் இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன. இந்த சூழலில் கடந்த ஜூன் 18-ம் தேதி அன்று காலிஸ்தான் கோரிக்கை குறித்து போராட்டங்களை நடத்தி வந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய கனடா அரசு, நிஜ்ஜாரின் கொலையில் இந்திய உளவுத்துறைக்கு பங்கு இருக்கலாம் என சந்தேகித்தது. இதனால் அந்நாட்டுக்கான இந்திய தூதர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவுக்கான கனடா தூதர் 5 நாட்களுக்குள் வெளியேறவேண்டுமென இந்திய அரசு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற ஜஸ்டின், கொக்கைன் கொண்டு வந்து பயன்படுத்தியதாக இந்தியாவை சேர்ந்த முன்னாள் தூதரவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட இந்தியாவை சேர்ந்த சூடானுக்கான முன்னாள் இந்திய தூதர் தீபக் வோக்ரா (Deepak Vohra) இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, தனது விமானத்தில் கொக்கைன் என்ற போதைப்பொருளை கொண்டு வந்தார். இதனை இந்திய மோப்ப நாய்கள் கண்டறிந்தது. இதனல்அவர் 2 நாட்களாக தனது அறையை விட்டு வெளியே வரவில்லை.
டெல்லி விமான நிலையத்தில் ட்ரூடோவை எனது மனைவி பார்க்கும்போது அவர் மனச்சோர்வுடனும் மன அழுத்தத்துடனும் இருந்துள்ளார். உண்மை என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் சமூக ஊடகங்கள் மற்றும் சில 'நம்பகமான வதந்திகள்' அவரது விமானத்தில் கொக்கைன் இருந்ததாக கூறுகின்றது. அந்த மாநாட்டின்போது, இரவு உணவு விருந்தில் கூட ட்ரூடோ கலந்துகொள்ளவில்லை. போதைப்பொருள் உட்கொண்டதால் அவர் சுயநினைவில் இல்லாமல் இருந்திருக்கலாம்." என்றார்.
இவரது கருத்து இப்பொது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, ஒரு தேசிய தொலைக்காட்சியில் "பிங் பாங் டிங் லிங் டிங் லிங்" என்று அழைத்து சர்ச்சையில் சிக்கினார். மேலும் 2007 முதல் 2009 வரை சூடானில் தூதராக இருந்தபோது நிதி முறைகேடுகள் தொடர்பாக அவரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.