பிரபஞ்சம் என்பது அதிசயத்தக்க பல்வேறு ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது. இதுவரை மனிதன் பிரபஞ்சம் பற்றி அறிந்துகொண்டது என்பது கடற்கரையில் உள்ள சிறு துகளை விட குறைவானதுதான். ஆனால், அதிலேயே பிரமிக்கத்தக்க வகையில் பல்வேறு சாதனைகளை மனிதன் செய்துள்ளான்.
விண்வெளிக்கு சென்றதில் தொடங்கி சூரிய குடும்பத்தை தாண்டி விண்கலத்தை அனுப்பியது வரை கடந்த சோலா ஆண்டுகளில் மனிதன் கற்பனைக்கும் எட்டாத செயல்களை செய்துள்ளான். அந்த வகையில் தற்போது விண்கல் ஒன்றில் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்த அடுத்த சாதனையை மனிதன் நிகழ்த்தியுள்ளான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பூமியை நோக்கி வந்துகொண்டிருந்த விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிரித்து அதற்கு 'பென்னு' என பெயரிட்டனர். இந்த விண்கல் பூமியை தாக்கும் வாய்ப்பிருப்பதாகவும் கருதப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதனை ஆய்வு செய்ய முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி அந்த விண்கலத்தை ஆய்வு செய்யும் விதமாக ஓ'சிரிஸ் ரெக்ஸ்' என்ற விண்கலத்தை நாசா அமைப்பு விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலமும் 2 ஆண்டுகளில் சுமார் 2 கோடி கி.மீ. தூரம் பயணித்து கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி பென்னு விண்கல்லை அடைந்தது.
எனினும் அதனை நெருங்காமல் அதை சுற்றிவந்து அதில் மாதிரியை சேகரிக்க தோதான இடத்தை ஆய்வு செய்தது. அதன்பின்னர் அதற்கு மிகவும் நெருக்கமாக சென்று, தன்னில் பொருத்தப்பட்டிருந்த இயந்திர கையால் பென்னு விண்கல்லில் இருந்து மாதிரியை சேமித்து, பின்னர் கடந்த 2020ம் ஆண்டு பூமியை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.
இந்த நிலையில், தற்போது அந்த விண்கலம் வெற்றிகரமாக பூமியை அடைந்துள்ளது. இந்த விண்கலம் உட்டா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பாலைவனத்தில் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இது பயங்கர வேகத்தில் பூமியை நெருங்கும் என்பதால் இந்த விண்கலனில் இருந்து விண்கல் மாதிரி அடங்கிய கேப்ஸ்யூல் பாராசூட் மூலம் மெதுவாக உட்டா பாலைவனத்தில் நேற்று தரையிறங்கியது.
அதனைத் தொடர்ந்து அந்த கேப்ஸ்யூலை மீட்ட நாசா ஆய்வாளர்கள் அதனை விரைவில் பரிசோதனை செய்யவுள்ளனர். விண்வெளி ஆய்வில் இது ஒரு மிகப்பெரும் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதனை ஆய்வு செய்வதன் மூலம், சூரியக்குடும்பத்தின் தோற்றம், பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியும், கோள் உருவாக்கம், உயிர்களின் தோற்றம் குறித்த பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.