பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சித்து மூஸ்வாலா. பிரபல பாடகரான இவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் காங்கிரஸ் ஆட்சியில் போலிஸார் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆம் ஆத்மி அரசு அமைந்ததும் சித்து மூஸ்வாலாவுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து கடந்த மே 29ம் தேதி சித்து மூஸ்வாலா காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது. இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இந்த கொலையில் லாரன்ஸ் பிஸ்னோய் என்பவர் முக்கிய காரணமாக இருந்தது தெரியவந்தது. இந்த படுகொலையைத் தொடர்ந்து லாரன்ஸ் பிஸ்னோய் இந்திய அளவில் அதிகம் பிரபலமான கேங்ஸ்டராக மாறினார்.
இந்த நிலையில், கனடாவில் சுக்தூல் சிங் என்பவர் கொல்லப்பட்டதற்கு, லாரன்ஸ் பிஸ்னோய் பொறுப்பேற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் பகுதியை சேர்ந்த சுக்தூல் சிங் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவருக்கும் லாரன்ஸ் பிஸ்னோயின் கும்பலுக்கும் பல்வேறு மோதல்களும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுக்தூல் சிங் கனடாவுக்கு தப்பிச்சென்றார். அங்கு காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங் என்பவருக்கு துணையாக செயல்பட்டார். இந்த சூழலில், கனடாவில் சுக்தூல் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரின் கொலைக்கு லாரன்ஸ் பிஸ்னோய் பொறுப்பேற்றுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.