வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று முன்தினம் இரவு 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பொருளாதார மையமான மராகேஷ் என்ற நகரம் அருகே அமைந்ததால் அந்த நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . இரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பலரும் கட்டட இடிபாடுகளில் சிக்கினர்.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டதால் அதிலும் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது.
தற்போது அந்நாட்டு அரசு அறிவித்த தகவலின் படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,012-ஆக அதிகரித்ததாகவும் 2,059 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளது. அதிலும் பெரும்பாலான உயிரிழப்புகள் தெற்கே உள்ள அல்-ஹவுஸ் மற்றும் டாரூடன்ட் மாகாணங்களில் உள்ள மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் அந்த நாட்டு வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பல லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமைடைந்துள்ளனர்.
தற்போது இங்கே மீட்பு பணிகள் துரிதமாக நடந்துவரும் நிலையில், வீடிழந்தவர்கள் தங்க 1500 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ,மொரோக்கோ நாட்டுக்கு ஏராளமான வெளிநாடுகளில் இருந்தும் உதவிகள் குவித்து வருகிறது.