ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போரில் ரஷ்யா சார்பில் வாக்னா் என்ற தனியார் ராணுவம் பங்கேற்று உக்ரைனின் முக்கிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தது. இந்த சூழலில் வாக்னா் படைக்கும் ரஷ்யாக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதால் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீதே படையெடுப்பதாக வாக்னா் படையின் தலைவர் ப்ரீகோஜின் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வாக்னா் படைகள் மாஸ்கோ நோக்கி முன்னேறின. எனினும் ரஷ்யாவின் நட்புநாடான பெலாரஸ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு வாக்னா் படைகளும் அதன் தலைவர் ப்ரீகோஜினும் மாஸ்கோ நோக்கிய முன்னேற்றத்தை நிறுத்தி பெலாரஸ் நாட்டுக்கு சென்றனர்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாக்னா் படைகளின் தலைவர் ப்ரீகோஜின் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனை ரஷ்யா உறுதிப்படுத்தாத நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தின.
இதனைத் தொடர்ந்து வாக்னா் படைகளின் நிலை என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், ரஷ்ய அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிப் பத்திரத்தில் அனைத்து வாக்னா் படையினரும் கையொப்பமிட வேண்டும் என்று அதிபா் விளாதிமீா் புதின் உத்தரவிட்டுள்ளதாக 'தி காா்டியன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், வாக்னா் படையில் பணியாற்றும் அனைத்து வீரா்களும், ரஷ்ய அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளிக்கும் பிரமாணப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும், இதனை பின்பற்றாதவர்கள் படையில் இருந்து வெளியேறலாம் என்றும் கூறப்பட்டுள்ளதாக அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பிரமாணப் பத்திரம் வாக்னா் படைக்கு மட்டுமின்றி அனைத்து தனியார் படைகளுக்கும் பொருந்தும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், வாக்னா் படையில் 20 ஆயிரம் வீரர்கள் இருப்பதாகவும், இவர்கள் சிரியா, லிபியா போன்ற பல்வேறு இடங்களில் நிலைகொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.