கடந்த 2021-ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துக் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த டிராக்டர் பேரணியில் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்து, பேரணிக்கு காவல்துறை அனுமதி கொடுத்த வழியில் செல்லாமல், தடுப்புகளை மீறி சென்று கலவரத்தை உருவாக்கினார்.
அதனைத் தொடர்ந்து செப்டம்பரில் 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பை தொடங்கிய நடிகர் தீப் சித்து கடந்த ஆண்டு (2022) பிப்ரவரியில் ஹரியானாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அதன்பின்னர் 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் என்பவர் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து பஞ்சாப் தனிநாடு கோரிக்கையான காலிஸ்தான் கோரிக்கை தீவிரம் அடைந்தது.
முன்னதாக 1984-ம் ஆண்டே காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் அகற்றப்பட்டனர். எனினும் அவர்களது சித்தாந்தம் தற்போதும் கூட சில நபர்களிடம் இருந்து வருகிறது. அதன் விளைவு - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா என சீக்கியர்கள் இருக்கும் பகுதிகளிலும் தங்களுக்கு தனி நாடு வேண்டி இரகசியமாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் கூட சமீபத்தில் இந்த சர்ச்சை எழுந்தது. பல நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அதற்கு உந்துதலாக இருந்த அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டு அசாம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அண்டை நாடுகளில் காலிஸ்தானை சேர்ந்தவர்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டனர். அந்த வகையில் காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜார், கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹர்தீப்சிங் நிஜார் இந்திய அரசால் தேடப்படும் ஒரு குற்றவாளி ஆவார். எனவே அவரது மரணத்துக்கு இந்தியா தான் காரணம் என காலிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில் நேற்றைய முன்தினம் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
அங்கிருக்கும் இந்திய தூதரகம் எரியும் காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்துள்ளன. காலிஸ்தான் பயங்கரவாதிகள் நிகழ்த்தும் இந்த கொடூர தாக்குதலுக்கு தற்போது அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அஅப்போது காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியவாறே தூதரகத்தின் ஜன்னல், கதவுகளை இரும்பு கம்பிகளால் தாக்கி சேதப்படுத்தினர்.
அதுமட்டுமின்றி சிலர் இந்திய தூதரக அலுவலகத்தினுள் நுழைந்து அங்கே இருந்த மூவர்ணக் கொடிகளை அப்புறப்படுத்தியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது என்பது கூடுதல் தகவல்.