கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.
தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
அதன்பின்னர் அரசு ஆவணங்களை எடுத்துக்கொண்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து தற்போது ஆபாச நடிகையோடு தொடர்பில் இருந்ததாகவும் தன் மீதான குற்றச்சாட்டை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகையான ஸ்டோர்மி டேனியல் டொனால்ட் டிரம்ப் கடந்த 2006-ம் ஆண்டு தன்னுடன் நெருக்கமாக இருந்ததாக குற்றச்சாட்டை கடந்த 2016-ம் ஆண்டு சுமத்தினார். மேலும், தனது அனுமதி இல்லாமல் அவர் என்னிடம் தவறாக நடந்தார் என்றும் அவர் கூறியிருந்தார்.
டொனால்ட் டிரம்ப் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது இதன் காரணமாக இந்த விவகாரம் குறித்து பேசாமலிருக்க ஸ்டோர்மி டேனியேலுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்களை சட்டத்துக்கு புறமாக கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது 81 வயதான லீட்ஸ் என்னும் பெண்மணி டொனால்ட் டிரம்ப் தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், 1978 அல்லது 1979ஆம் ஆண்டு நியூயார்க்கிற்குச் செல்லும் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது டிரம்ப் என்னை முத்தமிட முயன்று என் உடல் பாகங்களை தொட்டு ஆபாசமாக நடந்துகொண்டார் என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.