அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஷூன் ஜெஃப்ரி (வயது 20)என்பவர் தனது 2 வயது குழந்தை டெய்லன் மோஸ்லியோடு வசித்து வந்தார். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று அவரின் உறவினர் ஒருவர் அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஷூன் ஜெஃப்ரி இறந்துகிடந்த நிலையில், அவரின் 2 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தேடுதல் வேட்டையில் போலிஸார் களமிறங்கினர்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்களிடம் போலிஸார் நடத்திய விசாரணையில், இறுதியாக அந்த குழந்தையின் தந்தை தாமஸ் மோஸ்லி அங்கு வந்ததாகவும், அவர் வெளியே செல்லும்போது அவரின் கையில் வெட்டு காயங்களை பார்த்ததாகவும் சிலர் கூறியுள்ளனர். இதனால் தாமஸ் மோஸ்லியை கைது செய்து அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், பல்வேறு இடங்களில் குழந்தையை தேடிய போலிஸார் குழந்தை குறித்த விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டிருந்தனர். இதனிடையே அந்த பகுதியில் இருந்த மேகியோர் ஏரியில் உலாவிவந்த முதலையின் வாயில் வித்தியாசமாக ஏதோ இருப்பதை கண்ட ரோந்து அதிகாரிகள் அந்த முதலையை பிடித்து பார்த்ததில் அது சிறுவனின் உடல் என்பதை கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுவன் எவ்வாறு முதலையிடம் சிக்கி உயிரிழந்தான் என்பது குறித்தும் பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.