அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். போதைப் பொருள் வழக்கில் இவருக்கு 20 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மூன்று ஆண்டு தண்டனை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த 2021ம் ஆண்டு வெளியேவந்துள்ளார். பின்னர் ஒருவாரம் கழித்து ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் என்பவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்குக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து அவரது இதயத்தை வெட்டி எடுத்துக் கொண்டு தனது மாமா வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு வெட்டி எடுத்து வந்த இதயத்தை உருளைக்கிழங்குடன் சேர்த்துச் சமைத்துள்ளார். பிறகு சமைத்த உணவைத் தனது மாமா, அத்தைக்குக் கொடுத்துள்ளார். அவர்கள் இந்த உணவைச் சாப்பிட மறுத்துள்ளனர். பிறகு அவர்கள் இருவரையும் அவர் கொலை செய்துள்ளார். இதோடு வீட்டிலிருந்த 4 வயது சிறுமியையும் அவர் கொலை செய்துள்ளார். இதையடுத்து அவராகவே நீதிமன்றத்தில் குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு ஐந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் போதை வழக்கில் இவர் தவறாக விடுவிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஆண்டர்சன் பெயர் தவறுதலாக விடுவிப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தவறு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அவர் ஏன் பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து சமைத்தார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நாளில் அடுத்தடுத்து நான்கு கொலைகள் நடந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகளையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.