1983-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட சிலிக்கான் வேலி வங்கி, படிப்படியாக வளர்ச்சி கண்டு தற்போது மிகப்பெரிய அமெரிக்க வங்கிகளில் ஒன்றாகவும் நாட்டின் 16-வது பெரிய வங்கியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், அதன்பின்னர் பணவீக்கம் அதிகரித்த நிலையில், நஷ்டத்தை ஈடுகட்ட தனது மொத்த கடன் பத்திரங்களை ரூ.14,000 கோடி நஷ்டத்தில் வேறு வழியின்றி விற்றிருப்பதாக அறிவித்தது..
இதன் காரணமாக சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகள் சுமார் 69% வீழ்ச்சியை சந்தித்தன.இது குறித்த தகவல் பரவியதும் 48 மணி நேரத்தில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.25 லட்சம் கோடி டெபாசிட் பணத்தை நிறுவனங்களும் பொதுமக்களும் வங்கியில் இருந்து எடுத்த நிலையில், வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் சிக்னேச்சர் வங்கியும் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் பெரிய வங்கிகள் அடுத்தடுத்து திவாலானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பலர் வேலையிழப்புக்கு உள்ளாகும் அச்சுறுத்தலும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது First Republic என்ற அமெரிக்க வங்கியும் மிகப்பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. சிலிகான் வேலி வங்கி திவாலைத் தொடர்ந்து, First Republic வங்கியிலும் பொதுமக்கள் தங்கள் பணத்தை எடுக்க குவிந்ததால் அந்த வங்கியின் பங்கு விலைகள் 60 சதவீதத்துக்கும் மேல் சரிந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த வங்கியை மீட்க ஜேபி மோர்கன் சேஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா உள்ளிட்ட அமெரிக்காவின் 11 பெரிய வங்கிகள் முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது பதற்றத்தை சற்று குறைத்துள்ளது. இதனால் First Republic வங்கியின் பங்கு விலையும் சற்று அதிகரித்துள்ளது. மேலும், பல்வேறு வங்கிகளில் இருந்து அவசரகால கடனாக 70 பில்லியன் டாலர்களை First Republic வங்கி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.